Last Updated : 10 Jun, 2025 07:51 AM

 

Published : 10 Jun 2025 07:51 AM
Last Updated : 10 Jun 2025 07:51 AM

Beverage என்பது காபி, டீ மட்டுமா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 135

Gadgets என எவற்றைக் குறிப்பிடலாம்? கருவிகளையா அல்லது மின்னணுப் பொருட்களையா? - பொதுவாக gadgets என்பவை அளவில் சிறியவையாக இருக்கும். அவை புதுமையான வையாகக் கருதப்படுபவையாக இருக்கும் (கண்டுபிடிக்கப்பட்டு பல காலமாகி விட்டால் அவற்றை gadgets என குறிப்பிட மாட்டார்கள்). Kitchen gadgets, electronic gadgets என்று பலவகை உண்டு.

Beverage என்பது காபி, டீயை மட்டும் குறிக்குமா அல்லது எல்லா திரவங்களையும் குறிக்குமா? - பழைய பிரெஞ்சு மொழியில் ‘bevrage’ என்றால் குடிப்பது எனப் பொருள். அதிலிருந்து உருவான ஆங்கிலச் சொல்தான் beverage. காபி, தேநீர் போன்ற சூடான பானங்களை மட்டுமல்ல, பழச்சாறு போன்ற குளிர்பானங்களையும் Beverage குறிக்கும். ஏன் மதுபானங்களைக்கூடக் குறிக்கும்.
ஆனால், தண்ணீர் என்பது beverageஇல் அடங்காது.

Artillery, cannon, shell ஆகியவை ஒன்றுதானா? - போர்த் தளவாடங்கள் என்கிற பொருளில் Shell என்பது குண்டு. Artillery, cannon ஆகியவை பீரங்கிகள். மற்றபடி விலங்குகள், முட்டைகளுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ள கெட்டியான மேல் உறையும் shell என்று அழைக்கப்படுகிறது. ஆமை, நத்தை போன்றவற்றின் மீது அமைந்துள்ள கடினமான ஓடு shell எனப்படுகிறது. கொட்டைகளின் மேல் உள்ள கெட்டியான மேல் உறையும் shell என்றே குறிக்கப்படுகிறது.
He is a shell என்று ஒருவரைக் குறிப்பிட்டால் அவர் எலும்பும் தோலும் சதையுமாக இருப்பவர் மட்டுமே என்று பொருள். அதாவது ஆன்மா இல்லாதவர்.

மனித நேயம், பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாதவர். Canon என்பது கோட்பாடு என்பதையும் குறிக்கும். Canons of good deeds. பீரங்கியைக் குறிக்கும் cannon என்கிற சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உண்டு. கேரம் விளையாட்டில் பயன்படுத்தும் சொல் cannon. இரண்டு காய்கள் ஒட்டியபடி காணப்பட்டு, அவற்றில் பின்னால் இருக்கும் காயை அடித்தால் முன்னால் இருக்கும் காய் பாக்கெட்டில் விழ வாய்ப்புள்ளதாக அமைந்திருந்தால் அப்படிக் குறிப்பிடுவோம்.

Abortion என்பது தானாக நடப்பதா? திட்டமிட்டு செய்யப்படுவதா? - கருச்சிதைவு தானாகவும் நடக்கலாம். என்றாலும் மற்றபடி குறிப்பிடப்படவில்லை என்றால் abortion என்பது திட்டமிட்டு செய்யப்படுவதுதான்.
எப்போதுமே கரு தொடர்பானதாகத்தான் abortion என்கிற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. நீங்கள் சுற்றுலா செல்வதாக இருக்கிறீர்கள். ஆனால், புயல் மழை காரணமாக அதைத் தவிர்த்து விட்டீர்கள். இதை the mission (picnic) was aborted due to bad weather எனலாம்.

Iv என்று டாக்டர்கள் குறிப்பிடுவது எதை? - Im என்றால் Intra muscular அதாவது சதையில் போடப்படும் ஊசி மருந்து. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தில் கலக்கும். Iv என்றால் Intra venous. இது ரத்தக் குழாய் (சிரை மூலமாக) மூலம் போடப்படும் ஊசி மருந்து. (சிலர் நரம்பில் ஊசியை ஏற்றுவது என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமல்ல). இது ரத்தத்தில் உடனடியாக கலக்கும்.

சென்ற வாரம் அறிவித்த போட்டிகளின் விடைகள், சரியான விடைகளை அ​னுப்பிய வாசகர்களின் பெயர்கள் அடுத்த இதழில்.
கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

கேட்டாரே ஒரு கேள்வி - Cyber என்கிற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறேன். சைபர் என்று நாம் குறிப்பிடும் எண்ணுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா? பூஜ்ஜியத்தைக் குறிக்கும் (ஜீரோ என்பதற்கான) சொல் cipher.

அது cyber அல்ல. கணினி, டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையம், வலைதளங்கள் போன்றவை தொடர்பான சொல் cyber. பெரும்பாலும் அது ஒரு முன்னொட்டாகவே பயன்படுத்தப்படுகிறது. Cybercrime, cybersecurity, cyberwarfare என்பதுபோல.

1940களில் உருவான சொல் cybernetics. கருவிகள் மற்றும் உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராயும் அறிவியல் துறை. இது தகவல் பரிமாற்றம் தொடர்பானது.

சிப்ஸ்

His fear granulated என்றால்? - அவரது அச்சம் பொடிப்பொடியானது.

சன்னிதி? - Shrine

என் கனவு நனவாகிவிட்டது என்பதை ஆங்கிலத்தில் எப்படி கூறுவது? - My dream has come true.

- aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x