

ஒரு பள்ளிக்குள் இன்றைக்கு நுழைந்தால் வகுப்பறைகள் முன்பைவிட உயிர்ப்பாகவும் கலகலப்பாகவும் தெரிகின்றன. மாணவர்கள் மாதிரிகளை உருவாக்கு கிறார்கள். விளக்கப்படங்களை வெட்டி ஒட்டுகிறார்கள், திட்டப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். கதை, நாடகம், பாட்டு எல்லாம் இருக்கிறது.
மொத்தத்தில் வகுப்பறைச் சூழல், கற்பித்தலின் வடிவங்கள், கருவிகள் போன்றவை கடந்த பத்து ஆண்டுகளில் பெரிதும் மாறியுள்ளன. ஆசிரியர் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அமைதியான வகுப்பறைகளுடன் ஒப்பிடும்போது, இது வரவேற்கத்தக்க மாற்றம்.
இந்த மாற்றம் தற்செயலாக நிகழவில்லை. 20ஆம் நூற்றாண்டின் கல்விச் சீர்திருத்தங்கள் ஆசிரியரை மையமாகக் கொண்ட கல்வியை விமர்சித்து, குழந்தையை மையத்தில் நிறுத்தின. அதன் விளைவாக விளையாட்டுவழிக் கற்றல், செயல்வழிக் கற்றல், அனுபவவழிக் கற்றல் போன்ற புதிய அணுகுமுறைகள் பள்ளிக் கல்விக்குள் வந்தன.
இருப்பினும் ஓர் அடிப்படைக் கேள்வி இன்னும் நம்மைத் தொடர்ந்து வருகிறது; செயல்பாடுகள் அதிகரித்துள்ளன; கற்றல் ஆழமடைந்துள்ளதா? கல்வி பற்றிய நமது உரையாடல்கள் எப்படிக் கற்பிப்பது என்பதிலேயே பெரும்பாலும் நிற்கின்றன. மாணவர் கள் என்ன கற்றுக்கொண்டார்கள் எனும் கேள்விபோதிய அளவில் பேசப்படுவதில்லை.