என் ஆசிரியருக்கு இது தெரிந்திருந்தால்! | வகுப்பறை புதிது 50

என் ஆசிரியருக்கு இது தெரிந்திருந்தால்! | வகுப்பறை புதிது 50
Updated on
2 min read

உங்கள் துறைப் பாடம் மட்டுமே நன்கறிந்தவர், எதிரில் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளைப் பற்றி எதுவுமே தெரி யாதவர் எனில் உங் களை ஆசிரியர் என எப்படி அழைப்பது? - கைல் ஸ்வாட்ஸ்.

போர்பந்தரில் தான் படித்த பள்ளி யைப் பிற்காலத்தில் காந்தியடிகள் பார்வையிட்டார். “நான் ஆங்கில ஆசிரியர் மொழிப்பாடத்தைப் பார்த்துக்கொள்கிறேன், நான் அறிவியல் பாடத்தைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் ஆசிரியர்கள் அவரிடம் கூறினர்.

“அப்படியானால் இந்தப் பள்ளியில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லையா?” என்று கேட்டார் காந்தியடிகள். பொதுவாக, ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடத்தை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு, தங்கள் மாணவர்களை அறிந்துகொள்ள முயல்வதே இல்லை.

நெகிழவைத்த சம்பவங்கள்: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, ‘என் ஆசிரியருக்கு இது தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்’ (I Wish My Teacher Knew This) புத்தகம். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத் தொடக்கப் பள்ளியில் 2015இல் ஆசிரியராக பணியாற்றியவர் 26 வயதான ஸ்வாட்ஸ். இவர் மூன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கு, ‘என் ஆசிரியர் இதை அறிந்து இருந்தால் நன்றாக இருக்கும்’ எனும் தலைப்பில் ஒரு வீட்டுப் பாடத்தைத் தந்தார்.

பதில்களை வாசித்து ஸ்வாட்ஸ் அசந்துபோனார். அந்தப் பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வீட்டுக் குழந்தைகள். லத்தின் அமெரிக்க, ஹிஸ்பானிக், ஆப்பிரிக்கக் குழந்தைகள் அளித்த பதில்களால் பல இரவுகளுக்கு உறக்கத்தைத் தொலைத்தார். தன் குடும்பமே சாப்பிடவில்லை என்பதிலிருந்து, அப்பா விபத்தில் இறந்துவிட்டார் என்பதுவரை எத்தனை எத்தனை பிரச்சினைகள் குழந்தைகளுக்கு.

வகுப்பறைக்குள் புதிய நம்பிக் கையையும் சமூக உணர்வையும் வெளிப்படையாக இந்த ஒரு வேலை தொடங்கி வைத்தது. குழந்தைகள் அவரிடம் மிக நெருக்கமாக வரத் தொடங்கினர். வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகள் தங்கள் கதைகளைப் பகிர்ந்தபோது உன்னதமான தருணங்களை அவர் அனுபவித்தார்.

தன்னை நெகிழவைத்த சம்பங் களை ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில் பகிரத் தொடங்கினார். அது உலகையே உலுக்கியது. மற்ற ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளில் இதுபோன்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்கத் தொடங்கினர். அமெரிக்காவைக் கடந்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல கண்டங்களில் இந்தப் போக்கு பரவியது. இவற்றையெல்லாம் இந்தப் புத்தகம் பேசுகிறது.

தொடரும் இயக்கம்: ஆசிரியர் ஸ்வாட்ஸுக்கு எழுதப்பட்ட குறிப்புகளில் ஒன்று மெக்சிகோ வுக்கு நாடு கடத்தப்பட்ட தன்னுடைய அப்பாவைப் பார்க்க விரும்பிய குழந்தையின் பதிவு. இதனை அன்றைய அமெரிக்க நாளிதழ்கள் வெளியிட்டன. பரபரப்பை ஏற் படுத்திய இந்தச் செய்திக்கு அரசு செவிமடுத்தது.

நாடு கடத்தப்பட்ட தந்தை நாட்டுக்குத் திரும்ப வரவழைக்கப் பட்டார். இதுபோன்று பல அற்புதங்களைச் சிறாரின் குறிப்புகள் சாதித் தன. “வீட்டுப் பாடம் செய்ய எனக்கு பென்சில் தேவை என்பதை ஆசிரியர் உணர வேண்டும்” என்கிற பதிலை ‘எக்ஸ்’ தளத்தில் வாசித்துவிட்டு, அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் பல வகை யான எழுதுகருவிகளை நெஞ்சம் தழு தழுக்க அனுப்பியவர்கள் என்பது உள்பட எத்தனையோ உண்மைகளை வெளிக்கொண்டு வந்த இந்த மகா அனுபவத்தை வாசிக்க வாசிக்கச் சிலிர்க்கிறது.

‘என் ஆசிரியருக்கு இது தெரிந்தால் நன்றாக இருக்கும்’ என்பது பல நாடுகளில் இன்றும் தொடரும் ஓர் இயக்கம். பாடத்தைக் கற்பிப்பதில் வல்லுநராகத் திகழும் ஆசிரியர், தம் மாணவர்களையும் அறிந்துகொண்ட ஒருவராக மாறும்போது கற்றல் அனுபவம் சிகரத்தைத் தொடுகிறது என்பது ஒப்பற்ற உண்மை.

(நிறைவடைந்தது)

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

என் ஆசிரியருக்கு இது தெரிந்திருந்தால்! | வகுப்பறை புதிது 50
‘அனைத்து உயிர்களும் சமமே’ - தூத்துக்குடியில் ஈர்க்கும் கிறிஸ்துமஸ் குடில்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in