

பள்ளி, கல்லூரியில் மாணவர்களுக்கு எந்த புராஜெக்ட், அசைன்மென்ட் கொடுத்தாலும் அதைச் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி முடித்துக்கொண்டுவரும் பழக்கம் மாணவர்களிடம் அதிகரித்துவிட்டது.
அதை ஆசிரியர்கள் எப்படிக் கண்டறியலாம்? ஏஐயை மாணவர்கள் கற்றலுக்குத் துணை யாகப் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு புராஜெக்ட் முழுவதும் அதன் மூலமே முடித் தால், அது மாணவர்களின் கற்றல் திறனை மோசமாகப் பாதிக்கும்.
வாசித்தல், ஆய்வு, சரிபார்ப்பு
மாணவர்கள் கொண்டுவரும் புராஜெக்டு களை முதலில் முழுமையாக வாசித்துப் பார்க்க வேண்டும். முழுக் கட்டுரையின் மொழிநடை, தொடர்ச்சி, வாக்கிய அமைப்பு, அதன் நீளம் என அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கடைசி யாகச் சரிபாக்க வேண்டும். ஏஐயால் தயாரிக்கப்படும்போது, வாக்கியங்கள் ஒரே சீராக இருக்கும். வாக்கியங்கள் ஒரே புள்ளியைச் சுற்றி மீண்டும் மீண்டும் எழுதப் பட்டிருக்கும்.
படிக்கும்போது பத்திகளின் நீளத்தைக் கவனிக்க வேண்டும். ஏஐயால் எழுதப் பட்டிருந்தால், வாக்கியங்களின் அமைப்பு ஒரே மாதிரியாக, சீராக, நேர்த்தியாக இருக்கும். ‘எனவே’, ‘முதலில்’, போன்ற இணைப்புச் சொற்களைக் கவனித்தால், அவை தேவை யான இடத்தில் இல்லாமல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
மாணவர்களிடமே கேட்கலாம்
மாணவர்கள் தாங்களாகவே அந்த புராஜெக்ட்டை உருவாக்கி இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள, அவர்களிடம் அது தொடர்பான சில கேள்விகளை எழுப்பலாம். அவர்களே தயாரித்திருந்தால், எளிதாகப் பதில் கொடுக்க முடியும். இதன் மூலமும் ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் எழுத்துத் திறன் குறித்து ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே தெரியும். எனவே, அதை வைத்தும் எளிதாகக் கண்டறிந்துவிடலாம்.
தோராயமான வரைவு
மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கிய புராஜெக்ட் என்றால், அதற்காக அவர்கள் எண்ணற்ற தகவல்களைச் சேகரித்து இருப்பார்கள். அது குறித்த
விவரங்களைக் குறித்து வைத்திருப் பார்கள். எளிதாக ஒரே நேரத்தில் செய்தி ருக்க முடியாது. எனவே, ஆசிரியர்கள் அவர்களின் தோராயமான வரைவை (rough draft) ஆராய்ந்து, அதன் மூலமும் தெரிந்துகொள்ள முடியும்.
பரிசோதனை உத்தி
பெரும்பாலும் ‘சாட் ஜிபிடி’ (Chat GPT), ‘கிளாடு’ (Claude), ‘ஜெமினை’ (Gemini) ஆகியவற்றைப் பயன்படுத்தியே பெரும்பாலான புராஜெக்டுகள் தயாரிக்கப் படுகின்றன. எனவே, அவற்றின் வழக்க மான வாக்கியக் கட்டமைப்பைத் தெரிந்து கொள்வது அவசியம்.
அதுவும் மாணவர்களின் புராஜெக்டுகள் ஏஐயால் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய உதவும். ‘Large Language Model’களால் எதையும் தானாக உருவாக்க முடியாது. அதற்குக் கொடுக்கப்படும் promptகளை வைத்துதான் அது செயல்படும்.
சில தலைப்புகளைக் கொடுத்து, அதற்கு உள்ளடக்கத்தை எழுதிக்கொடுக்குமாறு கேட்டுப்பெற்று, அதை வாசித்து, ஒவ்வொன்றும் எவ்வாறு வாக்கியங்களை அமைக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பத்தியில் 3 அல்லது 4 வாக்கி யங்கள் கற்களை அடுக்கி வைத்ததுபோல் இருக்கும். மேற்கோள்கள், புள்ளி விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். தவறான தகவல்கள் இடம் பெற வாய்ப் புள்ளது.
எனவே, அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, நீங்களே இணையத்தில் பரிசோதித்துப் பார்க்கலாம். மனிதர்கள் எழுதும்போது சொற்களை மாற்றிப் பயன் படுத்தலாம். ஆனால், ஏஐக்கு வரம்பு உண்டு. அது ஒரே கருத்தைத் தொடர்ந்து எழுதும். ஒரு பத்தியை வாசிக்கும்போது, ஒரே மாதிரி இருந்தால், அது ஏஐயால் எழுதப்பட்டது என அர்த்தம்.
உதவும் கருவிகள்
ஏஐயால் எழுதப்பட்ட புராஜெக்டுகளைக் கண்டறிய இணையத்திலேயே வசதிகள் உள்ளன. ஜிபிடிஜீரோ (GPTZero), கிராமர்லி (Grammarly), ஸ்கிரிபர் (Scribbr), காப்பிலீக்ஸ் (Copyleaks) போன்ற செயலி கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தியும் துப்பறியலாம்.
அதேநேரம், மொழிநடை ஒரே மாதிரி இருப்பதை மட்டும் வைத்து, அதை எழுதிக் கொடுத்தது ஏஐதான் என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இதுபோன்ற பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்த பின்னரே ஆசிரியர்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஏஐ எதிரியல்ல...
ஏஐ பயன்பாடு வருங்காலத்தில் அதிகரிக்கக் கூடும். அதற்காக ஏஐயை எதிரியாகக் கருதத் தேவை இல்லை. நமக்குத் தேவையான தகவல்களை அதனிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். படிக்க உதவும் கருவியாகப் பயன்படுத்தலாம். நம் வேலையைச் செய்ய ஏஐயைப் பயன்படுத்தும்போது, நமது திறன் குறைந்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். இது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- priyadharshini.r@hindutamil.co.in