

“எங்கள் பள்ளியில் சரிவுப்பாதை (ramp) வசதி, சிறப்புக் கழிவறை உள்ளது. மாற்றுத்திறன் மாணவரின் தேவையைப் புரிந்துக்கொண்டு அமைத்துள்ளோம்” எனப் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் இப்போ தெல்லாம் பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனாலும், பலவிதமான மாற்றுத்திறன் மாணவர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய இவை மட்டும் போதாது.
பள்ளியின் நுழைவாயில், வெளியேறும் பகுதி சமமான மேற்பரப்புடன் சிமெண்ட், கல் பதிக்கப்பட்ட தரையாக இருக்க வேண்டும். சக்கர நாற்காலி பயன்படுத்தும், இயக்கக் குறைபாடு உள்ளவர்கள், வசதியாகவும் பாதுகாப்பாகவும் பள்ளியை அடைய இது உதவும்.
படிகள், மேடைகள் போன்றவை தொடங்குவதற்கு முன் தொடு உணர் தடக் கற்கள் (tactile warning pavers) அமைக்கப் பட்டால் பார்வைக் குறைபாடுடையவர்கள் தவறி விழாமல் பாதுகாப்பாக இயங்க முடியும். பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வாகன நிறுத்துமிடங்கள் (accessible parking spaces) ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
சரிவுப்பாதை: பல பள்ளிகளில் சரிவுப்பாதைகள் இருந்தாலும், அவை போதுமான அளவில் இல்லை. வழுக்கும் டைல்ஸ் அல்லது ஆழமான பிளவுகள் (grooves) உள்ள சரிவுப்பாதைகள் போன்றவை சக்கர நாற்காலி, கைப்பிடி, நடைக்கோல் (walkers) போன்ற உதவிப் பொருட்களைப் பயன்படுத்தும் குழந்தை களுக்குப் பாதுகாப்பானவை அல்ல.
சரிவுப்பாதை
வழித்தடங்கள்: பள்ளிகளில் படிக்கட்டுகள் போதுமான வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். படிக்கட்டு விளிம்புகளில் பளீர் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும், இதனால் குறைந்த பார்வையுள்ள குழந்தைகள் படிக்கட்டின் உயரம், அகலம் ஆகியவற்றை எளிதில் அறியலாம்.
இயக்க உதவிக் கருவிகள் (mobility aids), வெண்கோல் (White cane) பயன்படுத்துவோர் தடை இன்றி நடமாட மரப்பொருள்கள், செடிகள், அலமாரிகள், பிற பொருள்கள் வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். மங்கிய பார்வை கொண்ட குழந்தைகளுக்காக வழித்தடத்தின் இருபுறங்களிலும் மஞ்சள் வண் ணத்தில் தடித்த பட்டைகள் பொருத்தப்பட வேண்டும்.
சைகைப் பலகைகள்: கற்றல், ஆட்டிசம், கேட்டல், அறிவாற்றல் குறைபாடு உடையவர்கள் பள்ளி வளாகத்தில் சுயமாகச் செயல்பட சைகைப் பலகைகள் அவசியம். இதில் படம், அச்சு எழுத்து களுடன் பிரெய்ல் எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாகக் குடிநீர் பகுதிக்குக் குவளையுடன் கூடிய குழாய் படம் ஒட்டி அதில் தண்ணீர் என பிரெய்ல், அச்சு எழுத்தில் குறிப்பிட வேண்டும்.
நுழைவாயில்: அறைகளின் நுழைவாயில் சிறியதாக இருந்தால், சக்கர நாற்காலி, வாக்கர், கைப்பிடி போன்ற உதவிக் கருவிகளைப் பயன்படுத்தும் மாணவர்கள் நுழைவதற்குத் தடையாக இருக்கும். மேலும், அறைக் கதவின் கைப்பிடிகள் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு எட்டக்கூடிய உயரத்தில் இருக்கவேண்டும்.
இடப்பற்றாக்குறை காரணமாக, ஒரே அறையில் பல வகுப்புகள் நடத்தப்படுவதும் உண்டு. இதனால் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் கவன சிதறல் ஏற்படக்கூடும். வகுப்பில் நேர அட்டவணை, அறிவிப்புப் பலகை போன்றவற்றை அச்சு எழுத்து, பிரெய்ல் எழுத்து, படங்களுடன் காட்சிப்படுத்தினால் பல்வேறு கற்றல் சாவல்கள் உடைய மாணவர்களுக்குப் பயன் தரும்.
மேசைகள், நீண்ட நாற்காலிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்படுவது நடக்க உதவும் கால் உறை (caliper), நடைக்குச்சி (crutches), சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாணவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும். ஜன்னல் வழியாக வரும் மின்னும் ஒளியைக் குறைக்க, திரைகள் அல்லது மறைப்புகள் (blinds) பயன்படுத்துதல் குறைந்த பார்வை கொண்ட குழந்தைகளும் கரும்பலகையை வாசிக்க உதவும்.
கரும்பலகையைவிட பச்சைப்பலகை குறைந்த பார்வை கொண்ட மாணவர்களுக்குக்கூட கண்களுக்கு எளிதாகத் தோன்றும். அதனைச் சரியான உயரத்தில் பொருத்தினால் மட்டுமே சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாணவர்களால் அதை வாசிக்கவும், அதில் எழுதவும் முடியும்.
தரையின் நிலை: மின்னும் மேற்பரப்புடைய, சேதமடைந்த, ஈரமான தரைகள் பார்வை, இயக்க குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஆபத்தானவை. வடிவமைப்பு நிறைந்த டைல்கள், மொசைக் தரைகள் ஆட்டிசம், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் குழப்பி, திசைதிருப்பக்கூடும்.
இத்தகைய அடிப்படைத் தடைகளை நீக்கினால் மட்டுமே சிறப்புத்தேவை உடைய குழந்தைகள் பதற்றமின்றி பள்ளிக்கூடம் வந்து வகுப்பறை செயல்பாடுகளில் இயல்பாக ஈடுபட இயலும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவன சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com