

கல்வி கற்றல் அனைவருக்குமான அடிப்படை உரிமை. இதில், சிறப்புக் குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியை உறுதிசெய்வதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகச் செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்கீழ் 21 வகையான மாற்றுத் திறன் உடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் அனை வரையும் கண்டறிந்து உள்ளடக்கிய கல்வியில்பங்கேற்க வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
அணுகல் வேறுபாடுகள்: தமிழ்நாட்டில் 1.2 லட்சம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உள்ளடக்கிய கல்வியில் பயில்வதாகத் தரவுகள் சொல்கின்றன. எமிஸ் செயலி (EMIS) மூலம் தரவுகள் பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப் பட்டாலும் வெவ்வேறு வகையான நிலப்பரப்பு, பள்ளி அமைந்துள்ள இடம், புலம்பெயர் பெற்றோர், குடும்பப் பின்னணி, இன்னும் அடிப்படை வசதிகளே சென்றடையாத கிராமங்கள், போதிய விழிப்புணர்வு இன்மை, சமூகக் காரணிகளால் சிறப்புக் குழந்தைகளை மறைத்து வளர்ப்போர் என இன்னும் எத்தனை ஆயிரம் குழந்தைகள் விடுபட்டுள்ளனர் எனக் கண்டறிந்து பள்ளிக் குள் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ளடக்கிய கல்வி செயல்படுத்தப்பட்டாலும், அதன் வீரியம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. சென்னையில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பும், வளங்களும் கடைக்கோடி கிராமங்களில் அதன் தன்மை மாறாமல் கிடைக்கவைப்பது பெரும் சவால். அரசு, அரசு உதவிபெறும், தனியார் என பல்வேறு விதமான பள்ளிகளிலும் சிறப்புத் தேவையுடைய உள்ளடக்கிய கல்வி ஒரே விதமாகச் செயல்படுத்தப்படுவதில் நடைமுறை சார்ந்த வேறுபாடுகள் உள்ளன.
கட்டமைப்பு சவால்கள்: அனைத்து நிலைகளிலும் பள்ளிக் கட்டமைப்பில் சவால்கள் காணப்படு கின்றன. பள்ளிதோறும் சரிவுப்பாதை (ramps), கைப்பிடிகள் (rails) அமைக்கப் பட்டுள்ளன. எனினும் இன்னும் தரை தளத்தைத் தாண்டி மேல் தளங்களில் உள்ள வகுப்பறைகளை மாற்றுத் திறனுடைய மாணவர்கள் அடைய முடியாத நிலை நீடிக்கிறது. மேல் தளத்திலுள்ள வகுப்பறைக்குச் செல்ல மின் தூக்கிகள் அல்லது சரிவுப்பாதைகள் சில பள்ளிகளில் மட்டுமே காணப்படு கின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை பல பள்ளிகளில் அமைக்கப் பட்டுள்ளன. அவை பயன்பாட்டில் உள்ளனவா, சரியான வகையில் பராமரிக் கப்படுகின்றனவா எனக் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது.
பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்குத் தொடு உணர் தடம் (tactile path), மங்கிய பார்வை உடையவர்களுக்குத் தேவையான வகுப்பறைத் தகவமைப்புகள், கேட்டல் குறைபாடு உடையவர் களுக்கான சைகை மொழி வசதிகள், நரம்பியல் பன்முகத்தன்மை உடையவர்களுக்கான உணர்ச்சி சமநிலை ஏற்படுத் தும் இடங்கள் எனத் தேவைகளின் பட்டியல் நீள்கிறது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்தகைய தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளிலும் இத்தகைய கட்டமைப்பு வசதிகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பள்ளிகளை அடையத் தாழ்தளப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வசதி கள் மாநகரச் சாலை கட்டமைப்புக்கு மட்டுமே பொருத்தமாக உள்ளன.
சிறப்புப் பயிற்றுநரின் தேவை: உள்ளடக்கிய கல்வியில் பயிலும் சிறப்புத் தேவையுடைய மாண வர்களின் கல்வி, திறன்களை வலு வாக்கத் தமிழ்நாடு முழுவதும் 1,700 சிறப்புக் கல்விப் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறப்புக் கல்வி பயிற்றுநர் சராசரியாக 30 முதல் 40 சிறப்புத் தேவையுடைய மாணவர்களைக் கையாளுகிறார்.
இதனால் ஒரு சிறப்புத் தேவை உடைய மாணவரை மாதம் ஒரு முறை மட்டுமே சந்தித்துப் பயிற்றுவிக்க இயலுகிறது. சிறப்புத் தேவையுடைய மாணவரின் திறன் முன்னேற்றத்துக்குச் சிறப்புப் பயிற்றுநர்களின் இருப்பை உள்ளடக்கிய வகுப்பறையில் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது.
தற்போதைய உள்ளடக்கிய கல்வி வகுப்பறை என்பது உடல் இயக்கக் குறைபாடு உள்ளோர்க்கு மட்டுமின்றி உணர்வு, அறிவு, கற்றல், நடத்தை சிக்கல்கள் உடைய மாணவர்களையும் உள்ளடக்கியதே.
இவர்களின் தேவை கள் தனித்துவமானவை. இதை உணர்ந்தால் உரத்த சிந்தனை மூலம் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் பங்களிப்புடன் கூடிய உண்மையான உள் ளடக்கிய கல்வியை அளிக்க இயலும்.
- revbest15@gmail.com