பழமை மாறாமல் புதுமை

பழமை மாறாமல் புதுமை
Updated on
1 min read

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் விக்டோரியா பொது மண்டபத்தை சுழல் அருங்காட்சியகமாக மாற்றும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் உளகட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் கடந்த ஆண்டு மாநில பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தற்போது 42 திட்டப்பணிகளுக்கென ரூ.98.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்கீழ் 16 பள்ளிக்கூடங்கள், 11 பூங்காக்கள், 2 விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்படவிருக்கின்றன. இந்த வரிசையில் விக்டோரியா பொது மண்டபத்தின் தரைதளத்தை சுழல் அருங்காட்சியகமாக மாற்றும் பணி திட்டமிட்டிருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

134 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் இது. இதன் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இரண்டு பெரிய கூடங்கள் உள்ளன. அவற்றில் தலா 600-க்கும் மேற்பட்டோர் அமரலாம். மேலும் முழுக்க முழுக்க மரத்தால் அமைக்கப்பட்ட காட்சியகமும் உள்ளது. இந்த மண்டபத்துக்கு காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் உட்பட மாபெரும் ஆளுமைகள் பலர் வருகை தந்து சொற்பொழிவு ஆற்றியுள்ளனர்.

தமிழ் நாடகக் கலையின் முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் தங்களது நாடகங்களை இங்கு அரங்கேற்றியுள்ளனர். திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சி இங்குதான் 1916-ல் தொடங்கப்பட்டது. மேலும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் சாட்சியான இந்த கட்டிடத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பிப்பதன் வழியாகத்தான் அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்த முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in