

ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி மனிஷா தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். வெறும் 17 வயதில் இத்தனை மகத்தான சாதனையை படைத்திருக்கும் மனிஷாவிடம் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. பிரசவத்தின்போது ஃபோர்செப்ஸ் ஆயுதத்தின் மூலம் தாய் வயிற்றிலிருந்து மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டபோது வலது கை எலும்பில் மனிஷாவுக்கு வளைவு ஏற்பட்டது. இதனால் தனது வலது கையை நேராக நீட்டி பயன்படுத்த முடியாமலேயே வளர்ந்து வந்தார். மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு பிறகே அவரால் தனது வலது கையை ஓரளவேனும் உபயோகிக்க முடிந்தது.
கை உதவாமல் போனால் என்ன நம்பிக்கை இருக்கிறதே! தனக்குள் அபாரமான விளையாட்டு வீராங்கனை குடிகொண்டிருப்பதை 10 வயதில் உணரத் தொடங்கி இருக்கிறார் மனிஷா. உன்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று மேலும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் அவரது பள்ளி ஆசிரியர். துள்ளிக்குதித்து ஆடும் பேட்மிண்டன் விளையாட்டு மூலம் மனிஷாவின் சிறகுகள் விரியத் தொடங்கின. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஒற்றையர் மற்றும் இரட்டையர் பேட்மிண்டன் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றார், தற்போதுஉலக சாம்பியன்ஷிப்பையும் வென்றுவிட்டார். இதைவிட ஆச்சரியம், விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் மனிஷா முனைப்புடன் இருக்கிறார். கல்வியிலும் விளையாட்டிலும் சமமாக சாதிக்கும் மனநிலை தனக்கு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறி நிமிர்ந்து நிற்கிறார்.