

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் காலை சிற்றுண்டி கடை நடித்திவருபவரிடம் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் ஓர் இளைஞர். டிபன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை கடையின் உரிமையாளர் ஒட்டியுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட இளைஞர் இரவோடு இரவாக கடையின் உரிமையாளர் ஒட்டிய ஸ்டிக்கரை அப்புறப்படுத்திவிட்டு வேறொரு கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை ஒட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
தன்னுடைய வங்கிகணக்கிற்கு பணம் வராததால் சந்தேகமடைந்த கடைக்காரர் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளிக்க நடந்த திருட்டு அம்பலமாகியுள்ளது. இதேபோன்று கண்ணகி நகர், அடையாறு பகுதிகளிலும் போலியாக கி.யூ.ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்டி பணமோசடியில் அந்த இளைஞர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இத்தனைக்கும் ஏமாற்றிய அந்த இளைஞர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் பணியில் பணியாற்றி வருபவர். அப்படியிருந்தும் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இன்றைய தேதியில் பணப்பரிவர்த்தனை என்பது பெரும்பாலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. உணவு, உடை என பலவற்றை இருந்த இடத்திலேயே அலைபேசியை துழாவி ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கிவிடுகிறோம். அப்படியிருக்க பணத்தின் மதிப்பையும், பணத்தை கையாள்வதில் எச்சரிக்கை உணர்வையும் மாணவர்களுக்கு ஊட்டுவது அத்தியாவசியம்.
அதிலும் இன்று ஸ்மார்ட்போனை மாணவர்களும் அன்றாடம் பயன்படுத்தும் சூழல் வந்துவிட்ட பிறகு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ரொக்கப்பணத்தை தொலைத்தாலாவது உடனடியாக கண்ணுக்குத் தெரிந்துவிடும். ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனையில் கண்ணுக்கே தெரியாமல் பணம் களவாடப்படும் அபாயமுள்ளது. அப்படி எதிர்பாராமல் பணத்தை பறிகொடுக்க நேரிட்டால் தயங்காமல் பெரியவர்களின் துணையுடன் சைபர் போலிஸில் புகார் அளிப்பதும் மிகவும் முக்கியம்.