

மகாராஷ்டிரா மாநில தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தமிழக மாணவி கே.ஜெயலட்சுமி இடம் பிடித்திருப்பது இன்று அகில இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்று யோசித்து பார்ப்போமா மாணவர்களே!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 படித்தபோது சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஏழ்மை தடை கல்லாக நின்றது.
அப்போது அவருக்கு நிதியுதவி செய்ய முன்வந்த தொண்டு நிறுவனம் மேலும் அவருக்கு வேறெதுவும் தேவையா எனக் கேட்டது.
பொதுவாக இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், சுயநலமாகவே யோசிக்கத் தோன்றும். ஆனால், மாணவி ஜெயலட்சுமி கழிப்பறை வசதியின்றி அல்லல்படும் தனது ஊர் மக்களுக்கு நன்மை விளைய தனக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாக இதை கருதினார். அவரது வேண்டுகோளை ஏற்ற அந்த நிறுவனம் ஆதனக்கோட்டையில் 126 வீடுகளுக்குக் கழிப்பறை கட்டிக்கொடுத்தது.
நாசாவுக்கு மாணவி ஜெயலட்சுமி சென்றது எவ்வளவு பெரிய சாதனையோ அதற்கு சற்றும் குறைவில்லாததுதான் தனது கிராமத்துக்குக் கழிப்பறை வசதி வர செய்ததும். ஆகவேதான் வட இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ஏழாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இன்று அவர் கதாநாயகியாக ஜொலிக்கிறார். அன்று தன்னலம் மறந்து அவர் செய்த செயல் இன்று புகழின் உச்சிக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறது.
இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் மாணவி ஜெயலட்சுமியை வாழ்த்துவோம்!
சமூக நலமே நமது நலமென போற்றுவோம்!