பிகு பண்ணுவதும்... சண்டை போடுவதும்! | இது நம் வகுப்பறை சமூகம் 09

பிகு பண்ணுவதும்... சண்டை போடுவதும்! | இது நம் வகுப்பறை சமூகம் 09
Updated on
2 min read

பழனி பள்ளியின் மூத்த ஆசிரியர்களில் ஒருவர் பழனி. ஆங்கில ஆசிரியர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற உள்ளார். சாக்ரடீஸ் பற்றி மிகத் தெளிவாகவும் உருக்கமாகவும் பேசக் கூடியவர். தத்துவத்தின் தந்தை என போற்றப்படு பவர் சாக்ரடீஸ். 70 வயதுவரை வாழ்ந்த தாகக் கருதப்படுபவர்.

கேள்விகளின் வழி தத்துவ அறிவை வளர்த்தவர். இளைஞர்கள் பலர் அவர் பின்னால் திரண் டனர். அதைப் பொறுக்காத அரசு, அவரைச் சிறையில் அடைத்தது. ‘ஹெம்லாக்’ எனும் நஞ்சைக் கொடுத்து சாக்ரடீஸுக்கு மரண தண்டனை விதித்தது. “சுயபரிசோதனை செய்யாத வாழ்க்கையை, ஒரு வாழ்க்கையாக ஏற்றுக் கொள்வதில்லை” என்று சாக்ரடீஸ் சொன்னது மிகப் பிரபலம்.

சமமான அன்பு: பழனி கையில் எப்போதும் இருக்கும் புத்தகம், வில் டூரண்ட் எழுதிய ‘தத்து வத்தின் கதை’ (The Story Of Philosophy). பிளேட்டோ தொடங்கி ஜான் டூயி வரையிலான தத்துவ சிந்தனைகளைப் பேசும் புத்தகம். பழனிக்குத் தத்துவத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் மாண வர்களைச் சமமாக நடத்தினார். சமமான அன்பு! வகுப்பறையில் பார்க்க முடியாத அன்பு. மதிப்பெண் தீர்மானிக்காத அன்பு.

வகுப்பறையில் ‘வாசி’ என்பது ஆசிரியர் இடும் கட்டளைகளில் ஒன்று. அவரையும் அறியாமல் பழனி மீது, அது படிந்திருக்கிறது. 8ஆம் வகுப்பில் கொஞ்ச நேரம் பாடம் நடத்தினார். பிறகு சுடலையைக் கைகாட்டி வாசி என்றார். சுடலை எழுந்தான். பழனி கோபிக்க மாட்டார் என்று அறிவான். பழனி கோபித்து வகுப்பறை பார்த்தது இல்லை.

“திக்கும் சார்! வேண்டாம் சார்!” என்றான் சுடலை. உட்கார்ந்தும் விட்டான். அவன் முகம் கடுகடு என்று இருந்தது. அவனைப் பார்த்தார் பழனி. புரிந்தது, மெல்லச் சிரித்தார். எங்கேயோ உருவான கோபத்தை மறைத்து, இங்கு வந்து பிகு பண்ணுகிறான். ‘பிகு’ பண்ணுவதை வேடிக்கையாக மாற்ற நினைப்பவர் பழனி. சண்டையாக அல்ல.

இவனைச் சிரிக்க வைக்க வேண்டும். அதுதான் இப்போதைய வேலை. “உன் அப்பா பேர் என்ன? சின்னச்சாமிதானே! என் கூட பள்ளியில் படித்தவர்தான் சின்னச்சாமி தெரியுமா? அப்பவே ரொம்ப பிகு பண்ணுவார்” என்றார். சொல்லும்போது தலையும் ஆடியது. வகுப்பறை சிரித்தது. சுடலையும் சிரித்துவிட்டான்.

மீண்டும் எழுந்தான். மனப்பாரம் குறைந்தவன்போல் காணப்பட்டான். “சார்! வாசிக்கட்டுமா?” என்றான். “ம்!ம்!” என்று தலையசைத்தார் பழனி. சுடலை கடகட என்று வாசித்தான். சற்றும் திக்கவில்லை.

புறப்படும் முன்.. பக்கத்து வீட்டுப் பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்தார். பெரியம்மாவுக்குச் சிரித்த முகம். சிரிப்புதான் பல நோய்களுக்கு மருந்து. கணவனும் மனைவியும் பக்கத்து வீட்டில் ஒட்டாமல் வாழ்வதை பெரியம்மா தினசரி கண்டார். எந்த நேரமும் வாக்குவாதம். கசப்பான வார்த்தைகள். இது சரியல்ல. தீர்வு காணவேண்டும். கணவனுக்கு வேறு தொடர்பு ஏதேனும் உண்டா? இல்லை. மனைவி யாரையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இல்லை.

வேறு என்னதான் பிரச்சினை? பெரியம்மா உப்புமா செய்து அவர்கள் வீட்டுக்கு எடுத்துப்போனார். அவரால் தலையிட முடிந்தது. “உங்களுக்குள்ள என்னய்யா பிரச்சினை?” என்று அந்த வீட்டு ஆணிடம் கேட்டார்.

“என் நண்பர்கள் யார் வந்தாலும் முகம் சுளிப்பதுதான் இவங்க வேலை” என்று மனைவி மீது கணவன் குற்றம் சுமத்தினார். “நான் சமையல் எது செய்தாலும், இவர் ஒழுங்காச் சாப்பிடுவதில்லை” என்று கணவன் மீது மனைவி குறைப்பட்டார்.

அர்த்தமற்ற மனஸ்தாபங்கள். ஒவ்வொரு ‘பிகு’வும் இந்தக் குடும்பத்தில் சண்டையாக மாறுகிறது. தீர்க்கக்கூடிய பிரச்சினைதான். மதியம் 3 மணிக்குப் பெரியம்மா புறப்படும் முன் இருவரிடமும் பேசினார்: “என் செல்லங்களா! ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன். சேர்ந்து கைகோத்து காலம் பூரா நடக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா அது முக்கியம். அதுதான் வாழ்க்கை.”

இருவரும் கேட்டனர். பெரியம்மா உற்சாகமானார். கடைசியாகச் சொன்னார்: “பதிலுக்குப் பதில் பேசுறதும் செய் றதும் சண்டையத்தான் வளக்கும். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக் கணும். விட்டுக்கொடுத்தால்தான் சந்தோசமா இருக்க முடியும்”. இருவரும் சேர்ந்து வந்து பெரியம்மாவை வழியனுப்பினார்கள். பெரியம்மாவுக்கு அது கண்கொள்ளாக் காட்சி!

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

பிகு பண்ணுவதும்... சண்டை போடுவதும்! | இது நம் வகுப்பறை சமூகம் 09
அசட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் | இது நம் வகுப்பறை சமூகம் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in