

தன் குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதைக் கண்டறிந்த உடன் குழந்தையின் எதிர்காலம் குறித்த பலவித உணர்ச்சிப் போராட்டங்களுடன் பல மருத்துவர்களை பெற்றோர் நாடுகின்றனர். சிலர் இணையத்தில் பதில்களைத் தேடுகிறார்கள்.
ஆனால் உண்மை ஒன்றே, ஆட்டிசம் ஒரு நோய் அல்ல; அது ஒரு நரம்பியல் வேறுபாடு. அதனால் ஆட்டிசத்தை குணப்படுத்தும் ஒற்றை மருந்து இல்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் தொடங்குகிறது ஆட்டிசக் குழந்தையின் மேம்பாடு.
ஆட்டிசக் குழந்தைகளின் சிகிச்சைக்கு முன்மதிப்பீடு மிக அவசியம். குழந்தை வளர்ச்சி மருத்துவர், குழந்தை உளவியல் மருத்துவர், பேச்சுப் பயிற்சி நிபுணர், தொழிற் சிகிச்சை நிபுணர், சிறப்புக் கல்வியாளர் ஆகியோர் இணைந்து குழந்தையின் மொழி, தொடர்புத்திறன், சமூக தொடர்பு, நடத்தை வடிவங்கள், உணர்வு செயலாக்கம், அறிவாற்றல் ஆகியவற்றை மதிப்பிடுவார்கள். இந்த மதிப்பீடு ஆட்டிசம் என அடையாளத்தைக் கொடுக்க அல்ல. குழந்தைக்கு ஏற்ற தனித்துவமான திட்டத்தை அமைக்கவே.
தொடர்பே திறவுகோல்
பல குழந்தைகளுக்குப் பார்வைத் தொடர்பு, தொடர் கவனக்குவிப்பு, வார்த்தை பயன்பாட்டில் சவால் கள் இருக்கும். பேச்சு சிகிச்சை (Speech Therapy) இத்திறன்களைப் படிப்படியாக வளர்க்கிறது. பேசாத குழந்தைகளுக்குப் படப் பரிமாற்ற தொடர்பு முறை (Picture Exchange Communication System), சைகை மொழி, மாற்றுத் தொடர்புக் கருவிகள் (Augmentative & Alternative Communication devices) போன்ற தொடர்பு முறைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சிகிச்சை அமர்வுகள் மட்டுமல்ல, வீட்டிலுள்ள பெற்றோரின் தினசரி ஈடுபாடும் மிக முக்கியம். ‘திரை நேர’த்தைக் குறைத்து, குழந்தையுடன் நேரடி உரையாடலை அதிகரிக்க வேண்டும்.
வாழ்வுத் திறன்
சிறு இயக்கத் திறன்கள், தினசரி சுய பராமரிப்பு, உணர்வுச் செயலாக்கம், உடல் சமநிலை, ஒருங்கிணைப்பு போன்றவற்றில் உள்ள ஆட்டிச சவால்களைச் சமாளித்துத் திறன்களை வளர்க்க மிகச்சிறந்த சிகிச்சை என்பது தொழில்சார் சிகிச்சை (occupational therapy). விளையாட்டு அடிப்படையிலான சிகிச்சை முறை என்பதால் ஆட்டிசக் குழந்தைகள் இதில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.
சிறப்புக் கல்வி
ஆட்டிசக் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏணியாக அமைவது சிறப்புக் கல்வி. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கல்வித் திட்டத்தை உருவாக்கி, அவர்களின்
கற்றல் வேகத்துக்கு ஏற்ற இலக்குகள் நிர்ணயிக்கப் படுகின்றன. இதன் மூலம் பாடங்களை எளிமைப்படுத்தி, காட்சி வடிவில், செயல் அடிப்படையில் சிறப்புக் கல்வி கற்பிக்கப்படுகிறது. இது குழந்தையின் கவனம், நடத்தை சவால்களை சமாளிக்க உதவுவதுடன் இதன் மூலம் சமூகத் திறன்கள், தொடர்புத் திறன்கள், சுய பராமரிப்புத் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.
மருந்து எப்போது?
ஆட்டிசத்தைக் ‘குணப்படுத்த’ எந்த மருந்தும் இல்லை. அதேநேரம், குழந்தையின் அன்றாட செயல்பாட்டைப் பாதிக்கும் இணைப் பிரச்சினைகள் இருந்தால் மருந்துடன் கூடிய சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். எடுத்துக்காட்டாக அதீதப் பதற்றம், அதீதத் துறுதுறுப்பு, உறக்கம் சார்ந்த சிக்கல்கள், கடுமையான கோபக் கொந்தளிப்புநிலை அல்லது தன்னைத்தானே காயப்படுத்தும் நடத்தை போன்றவை இருந்தால், குழந்தை மனநல மருத்துவரை அணுகுவது அவசியம்.
நடத்தை சவால்களுக்குக் காரணம் உடல்நலப் பிரச்சினையா, உணர்வு சிக்கலா அல்லது சுற்றுப்புற மாற்றங்களா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மருந்து சிகிச்சை எப்போதும் Speech Therapy, Occupational Therapy, Behavioral Therapy போன்ற ஆதரவு சிகிச்சைகளுடன் இணைந்து வழங்கப்பட வேண்டும்.
மாற்றுச் சிகிச்சை?
ஆட்டிசக் குழந்தைகளுக்கு சில பெற்றோர் இசை சிகிச்சை, கலை சிகிச்சை, யோகா, தியானம், நீச்சல் பயிற்சி போன்ற மாற்றுச் சிகிச்சை முறைகளைத் தேர்வுசெய்கிறார்கள். கவனம், உணர்ச்சி வெளிப்பாடு, உடல் ஒருங்கிணைப்புத் திறன் களை மேம்படுத்த இவை உதவலாம்.
எடுத்துக்காட்டாக, இசை சிகிச்சை மூலம் சில குழந்தைகள் சொற்கள் இல்லாமலே, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள். யோகா, சுவாசப் பயிற்சி பதற்றத்தைக் குறைக்க உதவலாம்.
புதிய சிகிச்சை முறைகளை முயற்சிக்கும் முன், குழந்தைகளுக்கான மனநல மருத்துவருடன் ஆலோசனை செய்வது அவசியம். அந்த முறைக்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா, அதன் பயன், பக்கவிளைவுகள் என்ன என்பதைக் கேட்டு தெளிவுபெற வேண்டும்.
ஆனால், “ஒரே ஒரு சிகிச்சை முறையால் ஆட்டிசம் முழுமையாகக் குணமாகும்” என்பது போன்ற விளம்பரங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். சில நேரம், பாதுகாப்பற்ற மருந்துகள் அல்லது பரிசோதிக்கப்படாத சிகிச்சைகள் ஆட்டிசக் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com