

பள்ளிக்கூடத்தில் கடைசி வகுப்பு. மணி அடிக்கிறது. அவ்வளவு மாணவர்களும் ‘ஓ’ என்கிறக் கூச்சலுடன் வெளியே ஓடுகின்றனர். ஆட்டிசம் கொண்ட மாணவர் மட்டும் மிகச் சத்தமாக அழத் தொடங்குகிறார். மற்றவர்களுக்குச் சாதாரண மாகவோ மகிழ்ச்சியாகவோ இருக்கும் செயல்கள் ஆட்டிசக் குழந்தைகளால் பதற்றமாக உணரப்படுகின்றன.
பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளில் பொருந்த முடியாமல் தனிமை யில், அழுகை யுடன் இருக்கும் ஆட்டிசம் கொண்ட குழந்தைகளைப் பார்த்து இருப்போம், ஏன் இந்த வேறுபாடு? அவர்களுக்குள் என்னதான் நடக்கிறது? ஆட்டிசம் ஒரு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த வேறுபாடு.
இவர்களுடைய மூளையின் தகவல் செயலாக்க முறை, மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது மாறுபட்டிருக்கும். கண்கள், காதுகள், தோல் போன்ற உணர்வு உறுப்புகள் மூலம் வரும் தகவல்களை மூளை எப்படிப் புரிந்து கொள்கிறது என்பதில் இவர்களுக்கு வேறுபாடு உள்ளது.
நரம்பு இணைப்புகளில் வேறுபாடு: ஆட்டிசக் குழந்தைகளின் மூளையில் சில நரம்பு இணைப்புகள் அதிகமாகவும், சில குறைவாகவும் இருக்க லாம். பள்ளி மணியோசை ஒரு சாதா ரண குழந்தைக்கு வெறும் சத்தமாக இருந்தாலும், ஆட்டிசக் குழந்தையால் அது பல மடங்கு அதிக மாக உணரப் படலாம். காரணம், அந்த ஒலியை மூளை வடிகட்ட முடியாமல் இருப்பது.
உணர்வு ஒருங்கிணைப்பு சிக்கல் வகுப்பறையில் ஆசிரியர் பேசுவது, மின்விசிறிச் சத்தம், நண்பர்கள் பேசுவது உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து ஆட்டிசக் குழந்தையால் குழப்பமாக உணரப்படலாம். இதனால் அந்தக் குழந்தைக் காது களை அடைத்துக் கொண்டு சத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இதற்குக் காரணம் மூளைக்கு ஒரே நேரத்தில் வரும் பல உணர்வுத் தகவல் களை ஒருங்கிணைக்க முடியாமல் தவிக்கின்றது.
செயல்பாட்டில் வேறுபாடு நண்பர் அழும்போது, அவர் அழுகைக்குக் காரணம் புரியாமல் இருக்கலாம். இது உணர்ச்சியின்மை அல்ல; அந்த உணர்வை மூளை உடனடியாக செயலாக்க முடியாத நிலை. மற்றவர்களின் முகபாவனை, உணர்வு களைப் புரிந்துகொள்ள உதவும் ‘மிரர் நியூரான்கள்’ (Mirror Neurons) ஆட்டிசக் குழந்தைகளில் வேறுபட்ட முறையில் செயல்படுவதால், குறிப்பிட்ட உணர்வை அவர்களின் மூளையால் உடனடியாகப் பிரதிபலிக்க முடியாது.
செயல்முறை சவால்கள்: நாள்தோறும் ஒரே வழியில் பள்ளிக்குச் சென்றுவரும் ஆட்டிசக் குழந்தையைப் போக்குவரத்து நெரிசல் அல்லது வேறு காரணங்களால் வேறு வழியில் அழைத்துச் செல்வது மிகக் கடினம். ‘பிடிவாதம் பிடிக்கிறான்' என மிக எளிமையாகச் சொல்கிறோம். ஆனால், அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மூளையின் செயற்பாட்டு முறை (executive functioning) புதிய மாற்றத்தைச் செயலாக்க நேரம் எடுத்துக்கொள்ளும்.
மீண்டும்! மீண்டும்! - சில ஆட்டிசக் குழந்தைகள் ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதைப் பார்த்திருப்போம். ஒரு குழந்தை கதவை 30 முறை திறந்து மூடலாம் அல்லது பொம்மைகளை ஒரே வரிசையில் அடுக்கிக்கொண்டே இருக்கலாம். தொடர்ந்து இந்தச் செயல்கள் அவர்களுக்குக் கட்டுப் பாடு, பாதுகாப்பு உணர்வை வழங்கு வதால் மீண்டும் மீண்டும் அவற்றைச் செய்கின்றனர்.
அதீத உணர் திறன்:
‘டியூப் லைட்’ ஒளி சாதாரணக் குழந்தைக்கு இயல்பாக இருந்தாலும், ஆட்டிசக் குழந்தையால் அது கண்களைக் குத்துவதுபோல உணரப் படலாம். சட்டையின் லேபிள் தோலுடன் உரசும்போது, அது வலிபோல உணரப் படலாம். ஆட்டிசக் குழந்தைகளின் மூளையில் சில நரம்புப் பாதைகள் மிக அதிகமாகச் செயல்படுகின்றன. இதனால், சாதாரணமாக வரும் ஒளி, சத்தம், தொடுதல் போன்றவை அதீதமாக உணரப்படுகின்றன.
குறைந்த உணர் திறன்:
ரத்தம் வரும் அளவு காயம் ஏற்பட்டால்கூட அழாமல் இருக்கும் ஆட்டிசக் குழந்தைகளைப் பார்த்து இருப்போம். இதற்குக் காரணம் மூளையில் உணர்வுத் தகவல்கள் சரியாகப் பதிவுசெய்யப்படாமல் இருக்க லாம். தேவையான அளவு உணர்வுத் தகவலை மூளை பெறவில்லை என்றால், குழந்தை தானாகவே அதைத் தேடும். இதனால்தான் இந்தக் குழந்தைகள் தொடர்ந்து குதிப்பது, சுழல்வது, பொருட்களைத் தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆட்டிசக் குழந்தைகள் காட்டும் அழுகை, கோபம், தனிமை தேடுதல், மீண்டும் மீண்டும் செய்யும் செயல்கள், இவை அனைத்தும் நடத்தைக் குறைபாடுகள் அல்ல. அது அவர்களின் மூளை அதிகமான உணர்வுத் தகவல்களைச் சமாளிக்க முடியாமல் ‘overload’ ஆகும்போது வெளிப்படும் விளைவுகள் மட்டுமே.
பொதுவெளியில் ஆட்டிசக் குழந்தை களைச் சந்திக்கும்போது அவர்களின் நடத்தைகளை வேறுபாடாகப் பார்த்து, குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, அந்த நடத்தைக்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆட்டிசக் குழந்தையும் அவர்களது அகத்திற்குள்ளே வேறொரு உலகத்தை உணர்ந்து வாழ்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்; revbest15@gmail.com