

“டாக்டர்.. அவன் இன்னும் பேசவே இல்லையே...” அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஒரு தாய் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவருடைய இரண்டு வயது மகன், யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை. பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பவில்லை.
“ஆண் குழந்தைகள் கொஞ்சம் தாமத மாகத்தான் பேசுவாங்க... இன்னும் கொஞ்சம் காத்திருங்க”, என்பதே உற்றார் உறவினரின் யோசனை. அந்தத் தாய் காத்திருக்கவில்லை. குழந்தை வளர்ச்சி நிபுணரை அணுகினார். மதிப்பீட்டில், அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடக்க காலக் கண்டறிதல்
உடனடியாகப் பேச்சுப் பயிற்சி, தொழில் முறை சிகிச்சை, பெற்றோர் வழிகாட்டுதல் ஆகியவை தொடங்கப்பட்டன. ஐந்து ஆண்டுகள் கழித்து, அதே குழந்தை பள்ளி யில் நண்பர்களுடன் விளையாடுகிறான். முழுமையாகச் சவால்கள் நீங்கவில்லை என்றாலும், சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்கப்படவே, அந்தக் குழந்தையின் வாழ்க்கை போக்கு சீரமைக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமாக, மனித வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகள், குறிப்பாக முதல் மூன்று ஆண்டுகள், மூளை வளர்ச்சிக்கான பொற்காலம். இந்தக் காலத்தில் நொடிக்கு ஆயிரக்கணக்கான புதிய நரம்பு இணைப்புகளை மூளை உருவாக்கும். குழந்தை பார்க்கும் ஒவ்வொரு முகமும், கேட்கும் ஒவ்வொரு ஒலியும், தொடும் ஒவ்வொரு பொருளும் அதன் மூளையை வடிவமைக்கின்றன.
ஆட்டிசம், கேள்வித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, பெருமூளை வாதம், அறிவுத்திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு என எந்த மாற்றுத்திறனாக இருந்தாலும், தொடக்கக் காலத்தில் கண்டறிதல் குழந்தையின் வளர்ச்சிக்கான கதவைத் திறக்கிறது.
சிக்கலுக்குச் செவி மடுத்தல்
ஆறு மாதக் குழந்தை மீரா, வீட்டில் பாத்திரம் கீழே விழுந்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை. குழந்தை நல மருத்துவர் செய்த ‘Hearing Screening’ பரிசோத னையில், அந்தக் குழந்தைக்குப் பிறவியி லேயே தீவிரமான கேட்கும்திறன் குறை பாடு இருப்பது தெரியவந்தது.
ஒரு வயதுக்குள் கேட்புக் கருவி (Hearing Aid) பொருத் துதல், பேச்சு, மொழிப் பயிற்சி ஆகியவை தொடங்கப்பட்டன. பெற்றோரும் வீட்டி
லேயே தொடர்ந்து அவளுடன் உரையாட லில் ஈடுபட்டனர். இன்று மீரா தனது வகுப்பு நண்பர்களுடன் உரையாடுகிறாள். அந்த மருத்துவப் பரிசோதனை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால்? அவளுடைய மொழி வளர்ச்சி பல ஆண்டுகள் தாமதமாகி இருக்கலாம்.
வெறும் தாமதமா?
ஒரு வயதுடைய தருணால் ஆதரவின்றி உட்கார முடியவில்லை. “எங்க வீட்டுல எல்லாரும் தாமதமாதான் நடந்தாங்க" என்றனர் குடும்பத்தினர். மருத்துவரின் மதிப்பீட்டில், அவனுக்குப் பெருமூளை வாதம் (Cerebral Palsy) கண்டறியப்பட்டது.
உடனடியாக Physiotherapy, Positioning, Early Stimulation ஆகியவை தொடங்கப்பட்டன. இன்று உதவியுடன் தருண் நடக்கிறான், பள்ளிக்குச் செல்கிறான், சுயமாக விளையாட முயல்கிறான்.
அவன் மற்ற குழந்தைகளைப் போல ஓடாமல் இருக்கலாம். ஆனால், தொடக்கத்தில் கிடைத்த பயிற்சி இல்லையென்றால், இன்று அவன் உட்காருவதற்குக்கூடச் சிரமப்பட்டு இருக்கலாம்.
ஒவ்வொரு மாற்றுத்திறனுக்கும் ஒரு பொன்னான நேரம் உண்டு. பார்வைக் குறைபாடுடைய குழந்தைக்கு, தொடக்க மாதங்களிலேயே தொடுதல், ஒலியின் மூலம் உலகத்தை அறியும் வாய்ப்புகள் தேவை. கேட்கும்திறன் குறைபாடுடைய குழந்தைக்கு, மொழி வளர்ச்சிக்கான பொற்காலம் முதல் இரண்டு ஆண்டுகளே.
ஆட்டிசக் குழந்தைக்கு, சமூகத் தொடர்பு, தொடர்பாற்றலை வளர்ப்பதற்குத் தொடக்கக் காலத் தலையீடு முக்கியம். பெருமூளை வாதம் கொண்ட குழந்தைக்கு, உடல்நிலை, இயக்கப் பயிற்சியை தொடக்கத்திலேயே தொடங்குவது இரண்டாம் நிலை உடல் சிக்கல்களைத் தடுக்கும். எந்த மாற்றுத்திறனாக இருந்தாலும், ‘தொடக்கத்திலேயே’ செய்வது மிகப்பெரிய சிகிச்சை.
பெற்றோர் எனும் சிகிச்சை நிபுணர்
மருத்துவரிடம் தங்கள் குழந்தையை மதிப்பீட்டுக்கு அழைத்துச்செல்ல பல பெற்றோர் தயங்குகின்றனர். தொடக்கக் காலக் கண்டறிதலின் நோக்கம் குழந்தைக்கு ‘லேபிள்’ கொடுப்பது அல்ல. அதன் தேவைகளைப் புரிந்துகொள்வதே.
பேசுவதில், பார்ப்பதில், நடப்பதில் குழந்தைக்கு உதவி தேவையா? கற்றலில் வேறுபட்ட அணுகுமுறை தேவையா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதே தொடக்கக் காலக் கண்டறிதல். “இவ்வளவு சிறிய வயதில் சிகிச்சையா?" எனப் பெற்றோர் பலர் கேட்பது உண்டு.
உண்மையில், தொடக்க காலத் தலையீடு என்பது மருத்துவமனைக்குச் செல்வது மட்டுமல்ல. அது குழந்தையின் அன்றாட வாழ்க்கையையே கற்றலாக மாற்றுவது. குழந்தையுடன் பேசுவது, பாடல்கள் பாடுவது, விளையாடுவது, கதை சொல்வது, பொருள்களைத் தொட்டு உணரவைப்பது, வீட்டிலுள்ள எளிய வேலைகளைப் பகிர்ந்தளிப்பது - இவை அனைத்தும் தொடக்கக் காலத் தலையீட்டின் ஒரு பகுதி.
சிறப்பு ஆசிரியர் அல்லது சிகிச்சை நிபுணர் வாரத்தில் ஒரு சில மணி நேரம் மட்டுமே குழந்தையுடன் இருப்பார். பெற்றோர் மட்டுமே நாள் முழுவதும் இருக்கக்கூடியவர்கள். எனவே, ‘பெற்றோர்தான் முதல் சிகிச்சை நிபுணர்’ எனும் கருத்து உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது.
முதலில் யார்?
குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதமோ, வேறுபாடோ இருப்பதாகப் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் சந்தேகித்தால், முதலில் குழந்தை நல மருத்துவரை அணுக வேண்டும்.
அவர் குழந்தையின் வளர்ச்சி மைல்கற்களை மதிப்பீடுசெய்து, தேவையெனில் வளர்ச்சி, நடத்தை சார்ந்த குழந்தை நல மருத்துவர் அல்லது குழந்தை நரம்பியல் நிபுணர், குழந்தை மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது-மூக்கு-தொண்டை நிபுணர் (ENT Specialist) போன்ற துறைசார் நிபுணர்களுக்குப் பரிந்துரைப்பார்.
மதிப்பீட்டின் அடிப்படையில் பேச்சு மொழி நோயியல் வல்லுநர், செயல்முறை மருத்துவர் போன்ற மறுவாழ்வு நிபுணர் களின் சேவைகள் வழங்கப்படும்.
இந்தியா வில் மாவட்ட ஆரம்ப காலத் தலையீட்டு மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், என்.ஐ.இ.பி.ஐ.டி. (NIEPID) போன்ற தேசிய நிறுவனங்கள் இந்தச் சேவைகளை வழங்குகின்றன. எதுவென்றாலும், குழந் தையின் வளர்ச்சியில் சந்தேகம் ஏற்பட்ட உடனேயே மதிப்பீடு பெறுவதே சிறந்தது.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com