

தாய்நாட்டைப் பிரிந்து அயல்நாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகள் தாய் மொழியை மறந்துவிடுவது பேரவலம். இந்தச் சோதனையை வெல்ல, ‘www.sorkkal.com’ எனும் இலவச செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தளத்தைத் தமிழாசிரியர் பி.எம்.ஏ. அமனுல்லா உருவாக்கி இருக்கிறார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த 40 ஆண்டு கல்வி அனுபவமிக்க அமனுல்லா, பள்ளியில் படிக்கும் தனது பேத்திக்குத் தமிழ் பயிற்றுவிக்க சில இணையப் பக்கங்களை மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார்.
இதன் அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய இணையதளத்தைத் தற்போது வடிவமைத்திருக் கிறார். உலகெங்கிலும் உள்ள 800க்கும் மேற்பட்ட தமிழ்க் குழந்தைகள் கடந்த ஒருவாரத்தில், ‘சொற்கள்’ தளத்தை அணுகி உள்ளனர்.
வெளிநாட்டுத் தமிழ்க் கல்வி மையங்களில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத் தொல்லையில் இருந்து குடும்பங்களை விடுவிக்க இந்த இணைய தளத்தை முற்றிலும் இலவசமாக உருவாக்கி யிருப்பதாக அமனுல்லா கூறியுள்ளார்.
நான்கு தூண்கள்
மொழி கற்றலின் அடிப்படையான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் (Listening, Speaking, Reading, Writing) ஆகிய நான்கு திறன்களையும் மையமாகக் கொண்டு இதில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களை ஈர்க்கும் வகையில் 40-க்கும் மேற்பட்ட இருவழித் தொடர்புகொள்ளும் கல்வி விளையாட்டுகள், செயல்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
நுண்ணறிவுக் கருவிகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களின் கையெ ழுத்தை அடையாளம் காணுதல், அவர்கள் உச்சரிக்கும் சொற்களை உடனுக்குடன் பரிசோதித்து, குரல்வழிப் பின்னூட்டம் வழங்குதல் உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சம்.
திறன்பேசி, டேப்லெட், மடிக் கணினி என எதில் வேண்டுமானாலும் தடையின்றி இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என உலகெங்கிலும் உள்ள சர்வதேசத் தமிழ்ச் சமூகம் இந்தத் தளத்தை நாளுக்கு நாள் அதிகம் பயன்படுத்தி வருகின்றது.
தாய்மொழியாம் தமிழை எளிய முறையில், நவீனத் தொழில்நுட்பத்துடன் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் இந்த முயற்சிக்கு உலகத் தமிழர்களின் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.