

தன்னுடைய நெல் வயலில் பி.கோவிந்தராஜ்
நெல் சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற பரவலான நம்பிக்கையை உடைத்து, சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக மகசூல் பெற்றுச் சாதித்து வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பி.கோவிந்தராஜ்.
காவிரி டெல்டா பகுதியில் பிரதான சாகுபடியாக நெல் விளங்கும் நிலையில், பயிர் வளர்ச்சிக்குத் தண்ணீர் மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. இருப்பினும், தற்போதைய நீர்ப் பற்றாக்குறை காலத்தில், குறைந்த தண்ணீரைக் கொண்டு நிறைவான மகசூலைப் பெற முடியும் என்பதை தஞ்சாவூர் அருகே உள்ள தோழகிரிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பி.கோவிந்தராஜ் மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகச் செய்து காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் பகுதி தஞ்சாவூரின் தென்மேற்கில் அமைந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டுமே எங்களின் முதன்மை விவசாய ஆதாரம். ஆரம்பத்தில் மற்ற விவசாயிகளைப் போலவே நானும் வாய்க்காலில் தண்ணீரைப் பாய்ச்சி நெல் சாகுபடி செய்தேன். ஆனால், அதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டது.
போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது வயலில் அதிக அளவில் நீர் தேங்கியது. அப்போது, ‘காய்ச்சலும் பாய்ச்சலுமாக’ சரியான அளவில் தண்ணீர் வழங்கினால் நெற்பயிர் நன்றாக வளரும் என்று வேளாண்மைத் துறையினர் ஆலோசனை வழங்கினர்.