

பயன்படுத்தப்பட்ட மடிக்கணினி, டேப்லெட் நன்கொடையாகத் தரலாம். இதைத் தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு தர ஆளுநர் மாளிகையில் சிறப்புப் பிரிவு ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மடிக்கணினி அல்லது டேப்லெட் சாதனம் இல்லாமலும், அவற்றைச் சொந்தமாக வாங்க முடியாமலும் ஆன்லைன் கற்றலைத் தொடர முடியாமல் நிலையில் இருக்கிறார்கள். கற்றலுக்குத் தேவையான டிஜிட்டல் சாதனங்களுக்கு மிகப்பெரிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஐடி நிறுவனங்கள், பிற நிறுவனங்களில் மற்றும் வீடுகளில் ஏராளமான மடிக்கணினி மற்றும் டேப்லெட் கருவிகள் பயன்படுத்தப்பட்டு, புதிய மாடல்கள் வந்தவுடன் பயன்படுத்திய மடிக்கணினிகள் பயன்படாமல் இருக்கின்றன.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இதுதொடர்பாகப் புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"ஐடி நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்காக தாங்கள் பயன்படுத்திய- நல்ல நிலையில் உள்ள மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்களை நன்கொடையாக வழங்க வேண்டும்.
நன்கொடை வழங்க முன்வருபவர்கள் தங்களது பெயர், முகவரி, தொடர்புகொள்வதற்கான தொலைபேசி/ அலைபேசி எண்கள், தங்கள் வழங்க விரும்பும் மடிக்கணினிகள், டேப்லெட்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களுடன் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கு lg.pon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
ஆன்லைன் கற்றலுக்காக மடிக்கணினி அல்லது டேப்லெட் தேவைப்படும் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கோரிக்கையை - தங்கள் பெயர், முகவரி, தொடர்புகொள்வதற்கான தொலைபேசி / அலைபேசி எண், பயிலும் வகுப்பு, பள்ளி கல்லூரியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களுடன் lg.pon@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அதோடு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி/ கல்லூரியில் இருந்து தேவையான கல்விச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். துணைநிலை ஆளுநர் மாளிகையில் இதற்காக சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்தன், நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்பு எண்- 90424 09582"
இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.