

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் இன்று (செப். 20ஆம் தேதி) தமிழக முதல்வர் கலந்துகொண்டு, சேர்க்கை ஆணையை வழங்கினார். அப்போது முதல்வர், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:
''இந்த நாட்டின் நிலையான செல்வம் பொறியியல் பட்டதாரிகளும், மருத்துவ நிபுணர்களும், கல்வியாளர்களும்தான் என்று அண்ணா குறிப்பிட்டார். அதனால்தான் கல்விச் செல்வம், கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.
கல்விச் செல்வம்தான் என்றும் அழியாத செல்வம் ஆகும். இத்தகைய அழியாத அறிவுச் செல்வமானது, அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் உயர் கல்வி நிலையங்களுக்குள் நுழைய வேண்டும். கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புறங்களில் இருக்கும் மிகப்பெரிய கல்வி நிலையங்களில் சேர வேண்டும்.
மருத்துவம், பொறியல் படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் நுழைய, நுழைவுத் தேர்வு தடையாக இருக்கிறது என்பதை அறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி அதனை ரத்து செய்தார். இன்று நீட் தேர்வுக்கு எதிராக இந்த அரசும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. சமூக நீதி உத்தரவுகளால்தான் சமநிலைச் சமுதாயம் அமைப்பதற்கான அடித்தளம் இடப்படுகிறது.
பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம்
முன்னாள் முதல்வர் காமராசர் காலம் என்பது பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. இன்றும் சொல்கிறோம். அதேபோல முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆட்சிக் காலம் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் சில ஆண்டுகள் கழித்து, எங்கோ ஒரு ஊரில் என்னைச் சந்தித்து, நீங்கள் கொடுத்த அரசாணையால் கல்வி பெற்ற நான், மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். சொந்தமாகத் தொழில் செய்கிறேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.