

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ஈரோடு, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 6 இடங்களில் புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கீழ் 14 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதையடுத்து மேலும் சில புதிய சட்டக் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்புகளுக்கெனத் தனித் துறை தொடங்கப்பட்டு, அதற்குக் கீழ் 6 புதிய சட்டக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அண்ணாமலை பல்கலை. வளாகம், ஈரோடு, மயிலாடுதுறை, தென்காசி, திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சட்டக் கல்லூரிகளை அமைப்பதற்குச் சட்டத் துறை இடம் தேர்வு செய்து உயர் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது கருத்தைச் சமர்ப்பிக்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
யுஜிசி என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் செயல்படும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.