

புதுவைப் பல்கலைக்கழக ஆளுகைக்குக் கீழ் வரும் அந்தமான நிக்கோபர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கிவரும் பல்கலைக்கழக மையங்கள் சார்பாக இந்தக் கல்வியாண்டு முதல் எம்பிஏ படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுவைப் பல்கலைக் கழகத்தின் 2021 மற்றும் 2022ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்த மாணவர்களுக்கான விவரக் குறிப்பேடு அறிமுக விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் கலந்து கொண்டு, குறிப்பேட்டை வெளியிட்டார்.
முதல் பிரதியை அந்தமான் நிக்கோபர் தீவு பல்கலைக்கழக மையத்தின் பொறுப்பு அதிகாரி ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய துணைவேந்தர் குர்மீத் சிங், "உலக அளவிலான தர வரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள 1000 பல்கலைக்கழகங்களில் சிறந்த உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனமாகப் புதுவைப் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது.
உலகத் தரத்திலான உயிர் தொழில்நுட்பம், வேதியியல், நுண்ணுயிரியல் மற்றும் பன்னாட்டு அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன. இதில் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உழைப்பால் புதுவைப் பல்கலைக்கழகம் உலக அளவில் ஆய்வுத்துறையில் எதிர்காலத்தில் முன்னேறி இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்.
பல்கலைக்கழகப் படிப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகவும், இந்த கல்வியாண்டு முதல் அந்தமான் நிக்கோபர் பல்கலைக்கழக மையம் சார்பில் முதுநிலை வணிக மேலாண்மை மற்றும் பல்லுயிர்ப் பிராணிகள் குறித்த பட்டயப் படிப்பு ஆகியவை புதியதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு காரைக்கால் பல்கலைக்கழகம் கல்வி மையம் சார்பில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் திறன்களையும், அறிவாற்றலையும், வேலைவாய்ப்புகளையும், பன்னாட்டு உறவுகளையும் மேம்படுத்துகின்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக நவீனப் பாடப்பிரிவுகளில் சேர்ந்து மாணவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்" என்று துணைவேந்தர் குர்மீத் சிங் தெரிவித்தார்.
விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.