

மதுரை தியாகராசர் கல்லூரிப் பேராசிரியர்கள் இருவர் லண்டன் வேதியியல் ஆராய்ச்சிக்கூட உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் இணைப் பேராசிரியர்களாக பிரகாஷ், தர்மராஜ் ஆகியோர் பணிபுரிகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இக்கல்லூரியில் பணியாற்றும் பிரகாஷ் 130-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ’ஸ்கோப்பஸ்’, ’வெப் ஆஃப் சயின்ஸ்’ தளங்களில் வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த ஆய்வுகளின் வழியில் இரண்டு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். இவரது வழிகாட்டுதலில் 14 பேர் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இவரின் ஆய்வுக் கட்டுரைப் பகுதிகள் பிறரால் 3,032 முறை மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன.
இக்கல்லூரியில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் தர்மராஜ், தனது துறை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை ’ஸ்கோப்பஸ்’, ’வெப் ஆஃப் சயின்ஸ்’ தளங்களில் வெளியிட்டுள்ளார். உயிர் மருத்துவப் பயன்பாடு சார்ந்த இரு காப்புரிமைகள், மட்கும் தன்மை கொண்ட பாலிமர் பொருட்கள் சார்ந்த இரு காப்புரிமைகளைப் பெற்றுள்ளார். இவரிடம் 14 பேர் பிஎச்டி ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வேதியியல் துறையில் இவர்கள் நிகழ்த்தும் சிறப்பான ஆய்வுகளின் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதமாக லண்டனிலுள்ள வேதியியல் துறை சார்ந்த ஆராய்ச்சித் திறனுக்கான ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரியின் (எப்ஆர்எஸ்சி) உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மதுரை தியாகராசர் கல்லூரிச் செயலர் ஹரி தியாகராசன் கூறும்போது, ''இருவரின் ஆய்வுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களின் சாதனைகளை உரிய நேரத்தில் கல்லூரி நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. பெருமைமிக்க எப்ஆர்எஸ்சி உறுப்பினரான இரு பேராசிரியர்களும் ஆய்வில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.