9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி
Updated on
1 min read

9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் உயர் கல்வி சேர்க்கை குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாகச் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''கரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள் 11-ம் வகுப்பில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்களோ, அதே அடிப்படையில் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதாவது அந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் தொழிநுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைப் போலவே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகம். காமராசர் பல்கலைக்கழகம். அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களில் நியமனத்தில் தவறுள் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கலந்து பேசி, ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும்.

பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கையை நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வரிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in