

தமிழகத்தில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டே பெரும்பாலான கல்லூரிகளில் காகித வடிவிலான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் தவிர்க்கப்பட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தினர்.
தற்போது, தேர்வாகும் மாணவர்கள் ஆன்லைனிலேயே கல்விக் கட்டணமும் செலுத்தும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டு கரோனா என்பதால் ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கைக்கான தேர்வும், கட்டணம் செலுத்தும் நடைமுறையும் இருந்தது.
இவ்வாண்டும் கரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறும் முயற்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன.
இளநிலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர திட்டமிட்ட பிளஸ் 2 மாணவர்கள், தேர்வை எதிர்நோக்கி இருந்தனர். தேர்வு நடக்குமா ? நடக்காதா? எனும் தயக்கத்தில் இருந்த நிலையில், தொற்று அச்சத்தால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் எப்படி வழங்குவது என, அமைச்சர், பல்கலை பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
பெற்றோர், மாணவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டு மதிப்பெண் வழங்குவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் தேர்ச்சி அறிவிப்பு, மதிப்பெண் விவரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அனைத்துக் கல்லூரிகளில் முதுகலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், பெற்றோர் எந்த கல்லூரியில் சேருவது என, கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி நிறுவன உரிமையாளர்களிடம் தகவல்களை சேகரிக்கின்றனர்.
இதற்கிடையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 முடிவு தெரிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். ஒருசில தனியார், அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள் விருப்பமுள்ள மாணவர்கள் முதலில் ஆன்லைனின் பெயர், பாடப்பிரிவு போன்ற விவரங்களை முன்பதிவு செய்யலாம் தெரிவித்துள்ளதால், பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பதிவிடுகின்றனர்.
ஆனால், சில அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் அரசுக் கல்லூரிகளில் பிளஸ் 2 முடிவுக்கு பிறகே ஆன்லைனின் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும் என, அறிவித்துள்ளது.
தனியார் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில், ‘‘ இவ்வாண்டு பிளஸ் 2 தேர்வின்றி மதிப்பெண் வழங்கப்படுகிறது. வழிகாட்டுக்குழு வழங்கும் ஆலோசனையின்படி, அந்தந்த பள்ளி வழங்கும் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை அமையும் என, ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது.
ஆனாலும்,ஒருசில கல்லூரிகள் தங்களது கல்லூரிகளில் சேர விரும்புவோர் ஆன்லைனின் விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்து, மதிப்பெண் காலம், பிற விவரங்களை பதிவிட்டு அனுப்பலாம். மதிப்பெண் கிடைத்தபின், அதை பூர்த்தி செய்து, பிடிஎப் பைலாக அனுப்பும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளன.
கரோனா ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கடைசி நேரத்தில் திணறுவதைத் தவிர்க்க, முன்கூட்டிய மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை சில கல்லூரிகள் தொடங்கி இருக்கலாம்’’ என்றார்.