

2019- 20ஆம் கல்வியாண்டில் உயர் கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) அதிகரித்துள்ளதாக உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வில் (AISHE) தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வறுமையைப் போக்கவும், நிலையான, நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் 2015-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை எட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்களில் வருகிற 2035-ல் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 என்ற அளவில் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
18-23 வயதில் உள்ளவர்களில் எத்தனை பேர் உயர் கல்வியில் சேர்ந்தார்கள் என்பதைக் கணக்கிட்டு, மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில் உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு அறிக்கையை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* இந்தியாவில் உயர் கல்விக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 2019-20ஆம் கல்வியாண்டில் 27.1 ஆக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 26.3 ஆக இருந்தது.
* இதில் மாணவர்களின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 26.9 ஆக உள்ளது. மாணவிகளின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் மாணவர்களைவிட அதிகம். 27.3 ஆக உள்ளது.
* இதில் சிக்கிம் மாநிலத்தில் அனைத்து சமூக மாணவிகளுக்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் அதிகபட்சமாக 67.6 ஆக உள்ளது. அதேபோல ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், டெல்லி, கோவா, ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், பஞ்சாப், தெலங்கானா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் அனைத்து வகையான மாணவிகளின் மொத்த சேர்க்கை விகிதம் 30%க்கும் அதிகமாக உள்ளது.
* இதுவே தாழ்த்தப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 23.4 ஆகவும், பழங்குடியின மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 18 ஆகவும் உள்ளது.
பாலின சமநிலை அட்டவணை
* அதேபோல உயர் கல்வியைப் பொறுத்தவரை அனைத்து வகையான சமூகப் பிரிவிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. 100 ஆண்களுக்கு 101 பெண்களின் பங்களிப்பு உள்ளது.
* 2018- 19இல் உயர் கல்விக்கான மொத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை 3.74 கோடியாக இருந்த நிலையில், 2019-20ஆம் கல்வியாண்டில் 3.85 கோடி பேர் உயர் கல்வியில் இணைந்துள்ளனர். இது 3.04% அதிகரிப்பு ஆகும். மொத்த மாணவர் சேர்க்கையிலேயே அதிகபட்சமாக இளங்கலைப் படிப்பில் 79.5% மாணவர்கள் இணைந்துள்ளனர்.
இவ்வாறு உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.