'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் விரைவில் தொடக்கம்

'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் விரைவில் தொடக்கம்
Updated on
2 min read

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் கரோனாவைக் காரணம் காட்டிக் காலை, மதிய உணவுகள் தரப்படாதது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்தில் செய்தி வெளியானதை அடுத்து, அப்பள்ளிகளில் மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பெற்றோர்கள் அனுமதியுடன் சந்தேகத்தைத் தீர்க்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில், 2021 ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று கல்வித்துறை அறிவித்தது.

கடந்த ஜனவரி 18-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. அரை நாள்தான் பள்ளி என்பதால் அவர்களுக்கான உணவைப் புதுச்சேரி அரசு தருவதில்லை.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த முதல்வர் நாராயணசாமி, கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று அறிவித்துத் தொடங்கிய திட்டம் அதன்பிறகு பள்ளி திறக்கும்போது செயல்படும் என்றார்கள். தற்போது பள்ளிகள் தொடங்கிய பிறகும் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கு வந்தும் பல குழந்தைகள் பசியுடன் திரும்பிச் செல்லும் சூழலே உள்ளது.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்தில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த வாரம் முதல் மீண்டும் மதிய உணவு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in