

2021-ம் ஆண்டுக்கான கேட் தேர்வின்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவை மும்பை ஐஐடி வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான இத்தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.
2021-22ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு 2021 பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப் பிரிவு வாரியாக நடக்க உள்ளன. இத்தேர்வை மும்பை ஐஐடி நடத்த உள்ளது. இதற்கான இணைய வழியிலான விண்ணப்பப் பதிவு கடந்த செப்.11 முதல் அக்.14-ம் தேதி வரை நடைபெற்றது. ஹால் டிக்கெட் ஜனவரி 8-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தேர்வர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு முன்னதாகவும் தேர்வின்போதும் தேர்வு முடிந்து வெளியே செல்லும்போதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வீடியோ வடிவில் விளக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவை மும்பை ஐஐடி வெளியிட்டுள்ளது.
வீடியோவைக் காண:
இதற்கிடையே ''இளங்கலை பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகள் பல முறை நடத்தப்படுவதைப் போல கேட் தேர்வும் பல முறை நடத்தப்பட வேண்டும். தேர்வுக்குத் தயாராக கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் நுழைவுத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும்'' என மாணவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கேட் தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.