சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்லூரி ஆசிரியர்: கரோனாவால் விவசாயக் கூலியாக மாறிய அவலம்

சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்லூரி ஆசிரியர்: கரோனாவால் விவசாயக் கூலியாக மாறிய அவலம்
Updated on
1 min read

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற கல்லூரி ஆசிரியர் நவ்நத் கோரே, கரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயக் கூலியாகப் பணியாற்றி வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலம், சங்லி மாவட்டத்தின் நிக்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவ்நத் கோரே. 32 வயதான இவர், மராத்தியில் முதுகலைப் பட்டம் முடித்தவர்.

கல்லூரிக் காலங்களில், ஃபெஸாத்தி என்னும் முதல் நாவலை எழுதினார். ஏழ்மை நிலையில் தனக்கு ஏற்பட்டுள்ள அத்தனை தடைகளையும் மீறி, கதாநாயகன் எப்படித் தன்னுடைய படிப்பை முடிக்கிறான் என்பதே நாவலின் கரு. விவசாயிகள் பிரச்சினை பற்றியும் அதில் கூறப்பட்டிருந்தது. 2017-ல் நவ்நத் எழுதிய நாவலுக்கு 2018-ல் யுவபுரஸ்கார் விருது கிடைத்தது.

அதைத் தொடர்ந்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் அவருக்கு வேலை கிடைத்தது. ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார் நவ்நத். கடந்த பிப்ரவரி மாதம் அவரின் தந்தை இறக்க, மாற்றுத் திறனாளியான தனது தாயைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பும் அவருக்கு ஏற்பட்டது.

கரோனா வைரஸும் மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமும் அவரின் விரிவுரையாளர் வேலையைப் பறித்தது. தொடக்கத்தில் கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வந்தவர் தற்போது அருகேயுள்ள நிலங்களில் விவசாயக் கூலியாகப் பணியாற்றி வருகிறார். முழுநாள் வேலை செய்தால் ரூ.400 ஊதியம் கிடைக்கும் என்கிறார் நவ்நத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in