

செப்டம்பர் 7-ம் தேதி முதல் 100 சதவீதப் பணியாளர்களும் பணிக்கு வர வேண்டும் என அண்ணாமலை பல்கலைக்கழகம், பொறியியல் புலம்சார்ந்த பணியாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. ஆனால், பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருப்பதால் அங்கு பணிக்கு வர அண்ணாமலை பல்கலைக்கழகப் பணியாளர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவமனையானது கடலூர் மாவட்டக் கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால், இந்த மருத்துவமனையின் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. அதனால் பல்கலைக்கழக விடுதிகளில் கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு, கரோனா சிறப்பு முகாமாக அவை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் 7-ம் தேதி முதல், பல்கலைக்கழகப் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் எதுவும் இன்னும் திறக்கப்படாத நிலையில் 7-ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகப் பொறியியல் புலத்தைத் திறப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 2,000 பணியாளர்கள் இங்கு ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா மையமாக உள்ள விடுதிகளும், கல்லூரியும் ஒரே வளாகத்தில் உள்ளதால் இங்கு பணிக்கு வரும் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வராதபட்சத்தில் பணியாளர்களை மட்டும் பணிக்கு வரவைப்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயத்தைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை என்கிறார்கள் பல்கலை. ஊழியர்கள்.
பொறியியல் புல வளாகத்தில் கரோனா மருத்துவ மையம் செயல்படும் வரை 2,000 பணியாளர்களையும் ஒரே நேரத்தில் பணிக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அத்தியாவசியப் பணிக்குக் குறைந்த அளவு ஊழியர்களை மட்டும் அழைக்க வேண்டும் என நிர்வாகத்திடம் பல்கலை. ஊழியர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.