

கல்லூரி இறுதி்யாண்டு 6-வது செமஸ்டர் தேர்வால் மேற்படிப்பு மாணவர் சேர்க்கை பாதிக்குமா என பேராசிரியர்கள், மாணவர் சங்கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
கரோனா தடுப்புக்கான பொது ஊடரங்கு செப்.,30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்தாலும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
பல்கலை, கல்லூரிகளில் முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவர்கள் செமஸ்டரில் தேர்ச்சி, அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அவர்களும் தேர்ச்சி பெற்றதாகவே அரசு தெரிவித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களும் தங்களுக்கான 6-வது செமஸ்டர் தேர்வு ரத்தாகும் என எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கான தேர்வு செப்., 15க்கும் மேல் கட்டாயம் நடக்கும் என, உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான கல்லூரிகளில் 5-வது செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையில் அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் இட ஒதுக்கீட்டு முறையில் முதுநிலை படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
அரசுக் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடக்கிறது. இதற்கான கட்டணமும் பலர் செலுத்திய நிலையில், 6-வது செமஸ்டர் எழுதும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் தேர்ச்சி பெறுவோரால் மட்டுமே முதுநிலை படிப்பைத் தொடர முடியும். ஒரு தாளில் தோல்வி அடைந்தாலும் மேற்படிப்பைத் தொடர இயலாது. ஊரடங்கால் 6-வது செமஸ்டருக்கான பாடங்களை முறையாகப் படிக்காமல், ஆன்லைனில் பேராசிரியர்கள் ஆலோசனை பெற்று படித்தாலும் எத்தளவுக்கு உதவும் என, பேராசிரியர்கள், மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து இந்திய மாணவர் சங்க மதுரை மாவட்ட செயலர் வேல்தேவா கூறுகையில்,‘‘ ஏற்கனவே மாணவர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர்.
6-வது செமஸ்டருக்கான பாடங்களை முறையாக படிக்காமல், அவர்களை தேர்வெழுத வைக்க அரசு திட்டமிடுகிறது. 5-வது செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையில் ஏராளமானோர் விரும்பிய பாடங்களில் கல்லூரிகளில் சேர்ந்து, அதற்குரிய கட்டணமும் செலுத்திவிட்டனர்.
6-வது செமஸ்டரில் அரியர் விழுந்தால், கட்டணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட தொகையைப் பிடித்துக் கொண்டு கொடுத்தாலும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். 6-வது செமஸ்டர் தேர்வை தவிர்த்து, குறிப்பிட்ட மதிப்பெண் அளித்து மேற்படிப்பைத் தொடர செய்யவேண்டும்,’’ என்றார்.
பல்கலை பேராசிரியர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘ முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 2, 4 -வது செமஸ் டர், அரியர்ஸ் தேர்வுகளுக்கு அளித்த சலுகை போன்று இறுதியாண்டு மாணவர்களுக்கான 6-வது செமஸ்டர் தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண் அளித்து, அவர்களை மேற்படிப்புகளில் சேர வாய்ப்பளிக்கலாம்.
5-வது செமஸ்டர்படி மேல் படிப்பில் சேர்ந்து விட்டோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாணவர் களுக்கு 6வது செமஸ்டரில் அரியர் விழுந்தால் பாதிக்கப்படுவர். இந்த நடைமுறை சிக்கலை தடுக்க, 6வது செமஸ்டரில் கூடுதல் மதிப்பெண் பெற விரும்புவோருக்கு அவகாசம் கொடுத்து மீண்டும் தேர்வு நடத்தலாம்,’’ என்றார்.
கல்லூரி கல்வி இணை இயக்குநர் பாஸ்கரன் கூறும்போது, ‘‘ அரசுக் கல்லூரிகளில் இளநிலை, முதுகலை மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடக்கிறது. பொது போக்குவரத்து தொடங்கி இருப்ப தால் வெளியூர் மாணவ, மாணவியர்கள் தாமதமாக வர வாய்ப்புள்ளதால் இம்மாதம் 9-ம் தேதி மாணவர் சேர்க்கை நீடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கான 6-வது செமஸ்டர் தேர்வு நடத்த உயர்க்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செப்., 15 முதல் 30-ம்தேதிக்குள் தேர்வு நடக்க வாய்ப்புள்ளது,’’ என்றார்.