

பள்ளிகளை மீண்டும் திறக்க காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்களுக்கு மேல் ஆன நிலையிலும் பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மாற்று ஏற்பாடாக இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணைய வசதி இல்லாத குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க காலக்கெடு எதுவும் முடிவுசெய்யப்படவில்லை என்று அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை சண்டிகர் மட்டுமே மீண்டும் பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கோவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு அமையும் எனவும் ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்துக்கு பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே தலைமை வகிக்க சுமார் 20 எம்.பி.க்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். அதில் 3-ம் வகுப்புக்குப் பிறகே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் 8-ம் வகுப்பு வரை குறைந்த அளவிலான ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளால், சுமார் 2 கோடியே 40 லட்சம் ஏழைக் குழந்தைகள் முழுதும் பள்ளிப்படிப்பை நிறுத்தும் அபாயம் இருப்பதாகவும் இவர்கள் கூலி வேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
முன்னதாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் பள்ளித் திறப்பு குறித்து பெற்றோர்களிடையே கருத்துக் கேட்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.