

மாறி வரும் சூழலில் உயர் கல்வியில் அடுத்த தலைமுறைக்கான கல்வி முறையைக் கட்டமைப்பது குறித்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில், ஜெனீவாவில் உள்ள ஐநா மன்றத்தில் உயர் கல்விக் கருத்தரங்கம் நடக்கிறது. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 துணைவேந்தர்களும் 150 ஆய்வு மாணவர்களும் தங்களது ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.
இந்தக் கருத்தரங்கில் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பாகத் துணைவேந்தர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைப்பதுடன் அவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான பணியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதற்காக, துணைவேந்தர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர்கள் கலந்துகொள்ளும் இணைய வழியிலான ஆலோசனைக் கூட்டம் இந்திய நேரப்படி, 18-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜெ.செல்வகுமார், “மக்களுக்கான சமூகப் பணிகளில் தங்களோடு இணைந்து செயல்படுவதற்கு ஐநா மன்றம் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்புக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. அதன்படி நாங்கள் 11 விதமான சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதில் ஒன்றுதான் கல்விப் பணி.
இன்றைய காலகட்டத்தில், பருவநிலை மாற்றம், கரோனா போன்ற அசாதாரண சூழல்களையெல்லாம் சமாளித்து நாம் நமது வாழ்வாதாரத்தையும் காக்கும் விதமாக, அடுத்த தலைமுறைக்கான உயர் கல்வியில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. அதுகுறித்து ஆக்கபூர்வமாகப் பேசத்தான் ஐநாவில் வரும் பிப்ரவரி மாதம் உயர் கல்வி கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 துணைவேந்தர்களும் 150 ஆராய்ச்சி மாணவர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
உயர் கல்வியை அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில் கட்டமைப்பது குறித்து இந்தக் கருத்தரங்கில் துணைவேந்தர்களும் மாணவர்களும் 500 வார்த்தைகளுக்குள் அடங்கிய ஆய்வுக் கட்டுரைகளைத் தனித்தனியே சமர்ப்பிப்பார்கள். அது தொடர்பாக ஒவ்வொருவரும் 350 வார்த்தைகளுக்கு மிகாமல் ஐநா மன்றத்தில் பேசவும் வாய்ப்பளிக்கப்படும்.
இத்தகைய ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிக்க துணைவேந்தர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பல்துறை அறிஞர்களைக் கொண்டு வழங்கும் பணிகளை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்தப் பணியில் உலகத் தமிழ் வர்த்தக அமைப்பும் எங்களோடு இணைந்திருக்கிறது. இதற்கான முதலாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி ஜூம் செயலி வழியே நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 16 துணைவேந்தர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஏடிஜிபி எம்.ரவி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினியின் அமைச்சர் முத்துவேல் சசிதரன், மலேசியாவின் முன்னாள் துணை கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் உள்ளிட்டோரும் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
நெறியாளர் ஜான் தன்ராஜ் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்வின் நோக்கம் உயர் கல்வியில் அடுத்த தலைமுறைக்கான புதிய பாடத்திட்டங்களை உலகறியச் செய்யவும், எதிர்பாராத காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதும்தான். இந்த நிகழ்வைப் பல்வேறு நாடுகளில் 25-க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அடுத்தடுத்த வாரங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்களையும் பிற துறை சார்ந்த வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும். தொடர்ந்து பத்து வாரங்களுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் கருத்துகள் ஐநா மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துப் பேசவிருக்கும் துணைவேந்தர்களையும் ஆய்வு மாணவர்களையும் சென்று சேரும் வகையில் விரிவான அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தமிழகத்தைத் தலைமையாகக் கொண்டு செயல்படுவதால் ஐநா கருத்தரங்கில் தமிழர்களை அதிக அளவில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதும் எங்களது விருப்பம். இதுகுறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் educationgoto@gmail.com என்ற மின்னஞ்சலில் எங்களோடு இணைந்திருக்கலாம்” என்றார்.