டிஜிட்டல் எனும் மாணவர்களின் புதிய நண்பன்: கரோனா காலக் கல்வி

டிஜிட்டல் எனும் மாணவர்களின் புதிய நண்பன்: கரோனா காலக் கல்வி
Updated on
2 min read

டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டே அலைபேசி, டேப், ஐ-பாட் அகியவற்றின் பயன்பாடு இளம் தலைமுறையினரைச் சீரழித்துவிடுமோ என்கிற அச்சம் எழத் தொடங்கியது. குறிப்பாக மாணவச் சமூகத்தின் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற பயம் தலைதூக்கியது. இன்றோ கரோனா வைரஸ் என்ற நிஜ உலக பூதமானது மாணவர்களின் நண்பனாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாற்றியுள்ளது. வீட்டை விட்டு வெளியே வந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலைக்கு உலகெங்கிலும் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் டிஜிட்டல் கருவிகள் மட்டுமே நமக்கு கல்விக்கான பாலமாக உருவெடுத்திருக்கிறது. உலகெங்கிலும் இதே நிலைதான்.

சொல்லப்போனால் நம்முடைய அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்கள் உட்பட பெருவாரியாக பள்ளி மாணவர்களின் கல்வியிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அங்கம் வகிக்கத் தொடங்கிவிட்டது. பாடப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கியூ ஆர் குறியீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் வழியாக பாடங்களைச் சுலபமாகவும் சுவாரசியமாகவும் பயில வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு அவசியப்பட்டது. இன்றோ அது அன்றாட வாழ்க்கையோடு இணக்கமான ஒன்றாக மாறிப்போய்விட்டது. கல்வி, ஊடகம், போக்குவரத்து, வங்கித் துறை என பல்வேறு திசைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வீச்சு விரிவடைந்து வருகிறது.

டிஜிட்டல் உள்ளூர்வாசிகளும் வந்தேறிகளும்

இன்றைய குழந்தைகள் இரண்டு, மூன்று வயதிலேயே அத்தனை அதிநவீன சாதனங்களையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு இயக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களால் லாவகமாக அவற்றைக் கையாளவும் முடிகிறது. ஆனால் வயது முதிர்ந்தாவர்களால் அவர்களுக்கு ஈடுகொடுத்து அந்தக் கருவிகளைக் கையாள முடிவதில்லை. இது எதனால்?

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடிக் கண்டறிந்து அமெரிக்கக் கல்வியாளரான மார்க் பிரன்ஸ்கி `ஆன் தி ஹாரிஸான்’ (‘On the Horizon’) என்ற கட்டுரையை 2001-ல் வெளியிட்டார். அதில் ‘டிஜிட்டல் இமிக்ரன்ட்ஸ், டிஜிட்டல் நேட்டீவ்ஸ்’ (Digital Immigrants, Digital Natives’) ஆகிய வார்த்தை பிரயோகங்களை அறிமுகப்படுத்தினார்.

டிஜிட்டல் மயமான உலகில் இன்றைய மாணவர்களான குழந்தைகளும் இளைஞர்களும் சொந்த ஊர்க்காரர்கள் போல இயல்பாக வசிக்கிறார்கள். அவர்களுடைய மூளையின் அமைப்பே முந்தைய தலைமுறையினரிடம் இருந்து வித்தியாசமாக மாறியுள்ளது என நிறுவ முயன்றார். புதிய தலைமுறையினரால் தகவல்களைத் துரிதமாகப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. பன்முகச் செயல் திறன் உடையவர்களாகத் திகழ்கிறார்கள் (Multi-Tasking).

சொற்கள் மூலமாகவும் உரைநடை வடிவிலும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் காட்சி வடிவில் வெளிப்படுத்தவே எத்தனிக்கிறார்கள். ஆனால், டிஜிட்டல் மயத்துக்கு வந்தேறிகளான ஆசிரியர்கள் அந்நியர்களாகவே ஒதுங்கி நிற்கிறார்கள் என்றார்.

இந்தக் கட்டுரை எழுதப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் உட்பொருளை முன்பைக் காட்டிலும் இன்று நாம் ஆழமாக அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம். உண்மைதான் இன்றைய மாணவர்கள் டிஜிட்டல் வழி கல்வி கற்பதில் ஆர்வமாகவும் டிஜிட்டல் கருவிகளை கையாள்வதில் கில்லாடிகளாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு டிஜிட்டல் வழியில் கற்பிக்க ஆசிரியர்கள் துரிதமாக தயார்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in