

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரையிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிராவில் உள்ள சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சுபாஷ் தேசாய் கடந்த வாரம் தெரிவித்தார். அதற்கான சட்ட மசோதா மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறும்போது, ''அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவது அரசின் கொள்கை முடிவாகும். அரசுப் பள்ளிகளைத் தவிர சிபிஎஸ்இ, ஐபி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மராத்தி கட்டாயமாக்கப்படும். தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா மூலம் 10-ம் வகுப்பு வரை, மராத்தி மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
இதன் மாதிரித் திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாநில மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரையிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, நேற்று (புதன்கிழமை) கீழ் அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.