திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வறண்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வறண்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Updated on
1 min read

உடுமலை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால், திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி நீர் வரத்து இன்றி முழுமையாக வறண்டு காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலை ஆன்மிக தலமாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பஞ்சலிங்க அருவியில் நீராட சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழையினால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதாலும், கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாகக் குறைந்து தற்போது முற்றிலும் நின்று விட்டது.

இதனால் பாறைகள் வறண்டும், அருவியின் கீழ் அமைந்துள்ள தடுப்பணைகளிலும் நீர் இன்றி காணப்படுகிறது. வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்துடன் வருகை தரும் பயணிகள், அருவியில் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் தெரிவிக்கையில், ‘‘வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்கவும், விடுமுறையை கழிப்பதற்காகவும் குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவிக்கு வந்தோம். ஆனால், அருவி முழுமையாக வறண்டு போயிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’’ என்றனர். மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் கனமழை பெய்தால் மட்டுமே பஞ்சலிங்க அருவிக்கு நீர் வரத்து சீராகும். அருவி மீண்டும் எப்போது உயிர்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இயற்கை ஆர்வலர்களும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி வறண்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஜென்ஸீ தலைமுறையை ஈர்க்க உயர்மட்ட குழு - பாஜகவின் புதிய நகர்வும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in