

கொடைக்கானலில் குளிர் அதிகரித்து வருவதால் பனி படர்ந்து காணப்படும் செடிகள்.
பழநி: கொடைக்கானலில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் வாட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப் பொழிவு குறைந்துள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகரித்து நாள் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பகல் 12 மணிக்கு மேல் சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி காலமாக இருக்கும். நடப்பாண்டில் மழைப் பொழிவு காரணமாக, முன்கூட்டியே உறைபனி காலம் தொடங்கிடும் வகையில் குளிர் வாட்டி வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் செடி, கொடிகள், புல்வெளிகளில் பனி படர்ந்து காணப்படுகிறது.
பகலில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியஸ், இரவில் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கொடைக்கானலில் தற்போது நிலவும் சூழலை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. வழக்கமான வார விடுமுறையை காட்டிலும் நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.