உயிரோடு இருக்கும் எரிமலைக்கு ஒரு சுற்றுலா! | யாதும் ஊரே யாவரும் கேளிர்
பல நேரம் எனது கட்டுரைகளில் செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களைச் சுற்றி பார்ப்பது பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இப்போது மொரிசியஸில் இருந்து கூப்பிடும் தொலைவில் அமைந்திருக்கும் ரீயூனியன்.
இந்தக் குட்டி தீவு பிரான்சுக்கு சொந்தமானது. சுமார் 9 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தமிழர்கள்! ஆனால் பெரும்பாலானோருக்கு தமிழ்ப் பேசத் தெரியாது. மொரிசியஸில் இருந்து சுமார் 45 நிமிடத்தில் ரீயூனியன் தலைநகர் செயின் டெனிஸை (SAINT DENIS) அடைந்து விடலாம்.
சாலையின் ஒரு புறம் நம்மை தொட்டுவிடத் துடிக்கும் கடல் அலைகள், மறுபுறம் பாறைகள் விழாமல் இருக்க வலைகள் போர்த்தப்பட்ட மலைகள் என்று அத்தனை அழகும் கூடவே வருகிறது. இங்கே வருபவர்கள் மதம், மொழி, பாகுபாடு பாராமல் முதலில் செல்லும் இடம், பிளாக் விர்ஜின் மேரி (BLACK VIRGIN MARY) தேவாலயம். முழுவதும் அடர்த்தியான கருப்பு நிறத்தில் மிளிரும் இந்த தேவாலயச் சிலையில் கருணை ஒளிர்கிறது.
ஒவ்வொரு வருடமும் மே முதல் நாள் அன்று இங்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாட்டுக்குப் பயணம் செல்ல நினைக்கும் கனவு நனவாகாமல் இருக்குமானால் , நீங்கள் ஒரு முறை ரீயூனியன் வந்து பாருங்கள் போதும், ஐரோப்பா சென்று வந்தது போல் உணர்வீர்கள்.
இங்கும் கரும்புத்தோட்ட கூலிகளாகத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. உலகபாரம்பரிய பூமியென யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது ரீயூனியனின் மற்றொரு சிறப்பு. மொரிசியஸை போலவே கொடிய விலங்குகள் இல்லாத இந்தத் தீவுக்கு அருகில் உள்ள மற்றொரு நாடு மடகாஸ்கர்.
ரீயூனியன் தீவுக்குச் செல்வோர் மிஸ் பண்ணாமல் பார்க்கும் இடம் PITON DE LA FOURNAISE. இன்றளவும் உலகில் உயிரோடு இருக்கும் எரிமலைகளில் ஒன்று இது. உலகின் உயரமான, அடிக்கடி குமுறும் எரிமலைகளில் ஒன்று என்று அழைக்கப்படும் இந்த எரிமலை, சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்ததாகக் கருதப்படுகிறது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த எரிமலையைக் காணச் செல்லும் போது அதன் வழியில் நீங்கள் காணும் மணற் பரப்புகளும் சமவெளிகளும் இன்னும் கூடுதல் அழகு சேர்க்கிறது. என்னது எரிமலைக்கு சுற்றுலாவா? என்று யோசிக்காதீர்கள்.
