முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் படகு சவாரி கட்டணத்தை கியூஆர் கோடு மூலம் வசூலிக்க உத்தரவு

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் படகு சவாரி கட்டணத்தை கியூஆர் கோடு மூலம் வசூலிக்க உத்தரவு
Updated on: 
1 min read

திருவாரூர்: முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டில் படகு சவாரி கட்டணத்தைப் பணமாக வசூலிக்க தடைவிதித்துள்ள மாவட்ட வன அலுவலர், கியூஆர் கோடு மூலமாக மட்டுமே பணம் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் வனக்கோட்டம், முத்துப்பேட்டை வனச்சரகம், அலையாத்திக் காடுகளைப் பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் படகு சவாரி கட்டணமானது, அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன‌. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா வனத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணத் தொகையை இனிவரும் காலங்களில் “கியூஆர் கோடு” (QR Code) மூலம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். அவ்வாறு கியூஆர் கோடு மூலம் பெறப்படும் அனைத்துத் தொகைகளும் உரிய சூழல் மேம்பாட்டுக்குழு வங்கிக் கணக்கில் முறையாக வரவு வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், படகு சவாரி கட்டணத்தைப் பணமாக வசூலிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.பொதுமக்களிடமிருந்து எந்தவொரு சூழ்நிலையிலும் பணமாகக் கட்டணம் வசூலிக்காமல், கியூஆர் கோடு/ டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே கட்டணம் பெறப்பட வேண்டும். கியூஆர் கோடு மூலம் பெறப்படும் தொகைகளுக்கான பரிவர்த்தனை விவரங்கள், தினசரி வசூல் விவரங்களுடன் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும், வசூலிக்கப்படும் தொகைகள் அனைத்தும் உரிய சூழல் மேம்பாட்டுக்குழு கணக்கில் வரவு வைக்கப்படுவதை வனச்சரக அலுவலர் தனிப்பட்ட முறையில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றத் தவறி, ஏதேனும் காரணங்களை கூறி பணமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலரையே சாரும் எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in