

மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். படம்: ஆர்.டி.சிவசங்கர்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்குகிறது. ஆட்சியர் லட்சுமி பவ்யா தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பூங்காவில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, வண்ண மலர்களாக பூத்துக் குலுங்குகின்றன. மலர் மாடம் உள்பட பல இடங்களில் 50 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரம்மாண்ட நுழைவுவாயில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்னேசன் உள்ளிட்ட மலர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஊட்டி மலை ரயில் என்ஜின், மகாபலிபுரம் கோயில், திருவாரூர் தேர் உட்பட 26 அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களை விளக்கும் மலர் அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 7 லட்சம் மலர்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 200 போலீஸார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சி 10 நாட்கள் நடக்கிறது.