

விமானம் மேகங்களைக் கிழித்துக்கொண்டு மெதுவாகத் தாழத் தொடங்கிய போது, கீழே அதிகாலை இருளுக்கு மத்தியில் ஆயிரமாயிரம் விளக்குகள் நட்சத்திரங்களைப்போல மின்னிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
புத்தகங்களில் படித்து கற்பனை செய்திருந்த, திரைப்படங்களில் பார்த்து வியந்திருந்த நியூயார்க் எனும் கனவு நகரம் அன்று என்னை வரவேற்கக் காத்திருந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் மிக முக்கியமான, அதிக மக்கள் தொகை கொண்ட மாநகரமான நியூயார்க், கி.பி. 1624-ல் டச்சுக்காரர்களால் வணிகத் துறைமுகமாக உருவாக்கப்பட்டது.
இன்றைக்கு மன் ஹட்டன், குயின்ஸ், புரூக்ளின், ரிஸ்மண்ட், ப்ராங்க்ஸ் என ஐந்து நகரப்பகுதிகள் இணைந்து நியூயார்க் என்னும் பெருநகரமாக உருவெடுத்திருக்கிறது.
மன் ஹட்டன்
நியூயார்க்கின் இதயமான மன் ஹட்டன் (Manhattan) அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக, நிதி ஆதார, கலாச்சார மையமாக இருக்கிறது.
வானத்தைத் தொட முயலும் கட்டிடங்கள், ஏதோ ஒரு இலக்கை ஓடிச்சென்று பிடிப்பது போல வேக வேகமாக நடந்து செல்லும் மக்கள், மஞ்சள் நிற டாக்ஸிகள், சுரங்க ரயில்கள், ஒரு பர்கருடனும் காபி கோப்பையுடனும் நடந்துகொண்டே காலை உணவை முடித்துக்கொண்டு அலுவலகம் செல்லும் இளைஞர்கள், இவை மன் ஹட்டன் நகர வாழ்க்கையின் அன்றாட அடையாளங்கள்.
டைம் ஸ்கொயர்
தூங்கா நகரமான நியூயார்க்கின் இரவு வாழ்க்கையை முழுமையாக உணர, அனுபவிக்க டைம் ஸ்கொயர் சென்றால் போதும். விடிய விடிய கொண்டாட்டம்தான். நியூயார்க் நகரின் செவன்த் அவென்யூவின் 42 -வது தெரு முதல் 47- வது தெரு வரை விரிந்து கிடக்கிறது டைம் ஸ்கொயர்.
உலகத்தின் இதயம் (Heart of the World), பிரபஞ்சத்தின் மையம் (centre of the Universe) என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த இடம் உலகின் மிக பரபரப்பான நடைபாதைகளில்(Pedestrian area) ஒன்றாக, அதாவது பிஸியான ஒரு நாளில் சுமார் 4.6 லட்சம் பேர் கடந்து செல்லக்கூடிய நடைபாதை என கணக்கிடப்பட்டுள்ளது.
ஜம்போட்ராங்கள் என்று சொல்லப்படும் எப்போதும் மின்னிக்கொண்டேயிருக்கும் பிரமாண்ட டிஜிட்டல் விளம்பரத் திரைகள் ஒளி வெள்ளத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றன.
தெருவெங்கும் இசைக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் சந்தோஷ மனநிலையை உருவாக்குகின்றனர்.
டிராமா தியேட்டர் வாசல்களில் நிற்கும் அழகிய மாடல்கள், மாறாப்புன்னகையுடன் நம்மை தியேட்டருக்குள் அழைக்கிறார்கள். டிஸ்கவுன்ட் கூப்பன், ஃப்ரீ கிப்ட், கொகோ கோலா என இலவசமாகக் கொடுக்கும் எதையும் சிரித்துக்கொண்டே வாங்க மறுத்து உள்ளூர் வாசிகள் விலகிப்போகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் டிச. 31 அன்று இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களும் மிகச்சரியாக இரவு 11.59-க்கு நடைபெறும் பந்து வீழ்ச்சியும் (Ball drop) மிகப்பிரபலம். பல வண்ண விளக்குகளால் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் பந்து, அதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் கொடிக்கம்பத்தில் டிச.31 அன்று மாலை 6 மணிக்கு மேலே ஏற்றப்பட்டு கவுண்ட் டவுன் ஆரம்பமாகிறது. இரவு 11.59 மணிக்கு பந்து கீழிறங்கத் தொடங்கி மிகச்சரியாக 12 மணிக்கு தரையில் வீழ்ந்து புத்தாண்டைத் துவக்கி வைக்கிறது.
சுதந்திரா தேவி சிலை
நியூயார்க்கின் அடையாளமான சுதந்திரா தேவி சிலை, நகரத்தின் ஒரு பகுதியான லிபர்ட்டி தீவில் 1886 -ம் ஆண்டு நிறுவப்பட்டது. உயர்த்திய வலது கையில் ஒரு தீப்பந்தத்தையும் இடது கையில் சுதந்திரப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியான ஜூலை 4, 1776 என்று பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டையும் ஏந்தியபடி 305 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான நியோ கிளாசிக்கல் பெண் சிற்பமாய் காட்சியளிக்கிறார் சுதந்திரா தேவி.
மன் ஹட்டனிலிருந்து 15 நிமிட பயணதூரத்தில் இருக்கும் சுதந்திரா தேவி சிலை அமைந்திருக்கும் லிபர்டி தீவுக்கு (Liberty Island) சிறியரகப் படகுகள் இயக்கப்படுகின்றன.
எம்பயர் ஸ்டேட் பில்டிங்
ஐந்தாவது அவென்யூவில் 33 மற்றும் 34-ம் தெருக்களுக்கு நடுவில், 1454 அடி உயரத்தில் 103 மாடிகளுடன் நிமிர்ந்து நிற்கிறது ஆர்ட் டெக்கோ கட்டிட வடிவமைப்பு கொண்ட எம்பயர் ஸ்டேட் பில்டிங். 86-வது மாடி வரை செல்வதற்கு 44 டாலரும், 102 வது மாடிவரை செல்வதற்கு 79 டாலரும் கட்டணம்.
1931 மே மாதம் முதல் தேதியில் பயன்பாட்டுக்கு வந்தது எம்பயர் ஸ்டேட் பில்டிங். ‘ஹைர ஹைர ஹைரப்பா…’ என இயக்குநர் ஷங்கர், பிரசாந்தையும் ஐஸ்வர்யா ராயையும் நடனமாட வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1970 வரை உலகின் உயரமான கட்டிடம் என்ற புகழைத் தக்க வைத்திருந்தது.
கட்டிடத்தின் உச்சிக்குப்போக 1860 படிகள், 6500 ஜன்னல்கள், தனியான பின்கோடு எண் என பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. முதல் 85 மாடிகளில், கிட்டத்தட்ட 1000 தொழில்நிறுவனங்கள் 21,000 பணியாளர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. மின்தூக்கி சில விநாடிகளில் நம்மை 85 -வது மாடியில் கொண்டுசென்று நிறுத்துகிறது.
அங்கிருக்கும் கண்காணிப்புத் தளத்துக்குள் (Observatory deck) நுழைந்தால், குளிர் காற்று நிற்க விடாமல் ஆளைச் சுருட்டுகிறது. பாதி அமெரிக்காவை இங்கிருந்தே கழுகுப்பார்வையில் பார்க்க முடிந்தது. காற்றின் முன் தோற்றுப்போய் நிற்க முடியாமல் மையப்பகுதிக்கு வந்தால், நம்மைச்சுற்றிலும் கட்டிடம் கட்டப்பட்ட நிகழ்வுகள் காணொளிக் காட்சிகளாகத் தத்ரூபமாக ஓடுகின்றன.
86 வது மாடிக்கு மேலே 16 தளங்கள் கலை அலங்கார வடிவமைப்பு கோபுரங்களாக மட்டுமே இருக்கின்றனவாம். 102 -வது மாடியில் சுற்றிலும் கண்ணாடியிலான சுவர்கள். அந்த கண்ணாடி அறைக்குள்ளிருந்து 360 டிகிரி கோணத்தில் அமெரிக்காவைப் பார்க்கலாம், வெளியே போக அனுமதியில்லை.
சென்ட்ரல் பார்க்
நகரம் முழுவதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, நகரின் மையத்தில் 843 ஏக்கர் பரப்பளவில் ஏகாந்தமாய் பசுமை போர்த்திக்கிடக்கிறது சென்ட்ரல் பார்க். செயற்கையான வானளாவிய கட்டிடங்களின் நடுவே இயற்கைக்கும் ஒரு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பது சிறப்பு.
உலகிலேயே அதிக அளவு மக்கள் வருகை தரும் நகரப் பூங்கா - அதாவது வருடத்துக்கு 42 மில்லியன் மக்கள் வருகைதரும் பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு. மிகப்பெரிய ஏரி, இயற்கையாக உருவாகிய சரணாலயம், நீர்த்தேக்கம், செம்மறியாட்டுப் புல்வெளி, மால், ஹோட்டல், தியேட்டர் என மக்கள் விரும்பும் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது.
புரூக்ளின் பிரிட்ஜ்
லோயர் மன்ஹட்டனையும் புரூக்ளின் ஹைட்ஸையும் இணைக்கும் 6016 அடி நீளமுடைய அழகிய பாலம் இது. ஐந்து வழி வாகனப்பாதை, பாதசாரிகள் நடைபாதை, மிதிவண்டிப்பாதை என பாலத்தின்மீதே தனித்தனியாக பாதைகள் உண்டு. ஆனாலும், மன்ஹட்டனின் பரபரப்பான சாலைகளில் தேவையற்ற ஹாரன் ஒலிகளை எங்குமே கேட்க முடியாது.
NO Horn City என்கிறார்கள். நியூயார்க் நகரத்தின் போக்குவரத்து விதிகளின்படி ஹாரனை ஆபத்து குறித்து எச்சரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். 1869- ல் கட்டுமானம் துவங்கி, 1883 -ல் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்த மிகப்பழமையான இப்பாலம், அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக இருந்திருக்கிறது.
ஒருபுறம் மன் ஹட்டனின் உயரமான கட்டிடங்கள், மறுபுறம் புரூக்ளின், கீழே நகரும் வாகனங்கள், தூரத்தில் மின்னிக்கொண்டிருக்கும் கட்டிடங்கள், மேலே திறந்த வானம் என கையில் காபியுடன் ஒருசேர ரசித்துக் கொண்டே பின் மாலைப்பொழுதில் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பாலத்தின்மீது நடைபயில்வது நியூயார்க் பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
ராக்ஃபெல்லர் சென்டர்
மன்ஹட்டனின் மையப்பகுதியில் (Mid Town Manhattan) 49- வது மற்றும் 50 -வது வீதிகளுக்கிடையிலுள்ள ராக்ஃபெல்லர் சென்ட
ரின் தாழ்வான சதுக்கத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ்பெற்ற திறந்தவெளி பனிச்சறுக்கு மைதானம் (The Rink at Rockefeller).
உயரமான கட்டிடங்களின் பின்னணியில், வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனியில் சறுக்கிச் செல்லும் காட்சியில் லயிக்காதவர்கள் இருக்க முடியாது. காதலர்களின் முன்மொழிவுகளுக்கான (Proposals) விருப்பத்தேர்வில் முதன்மை இடத்தில் இருக்கிறதாம்.
1936 -ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக தற்காலிகமாகத் திறக்கப்பட்ட இந்த பனிச்சறுக்கு அரங்கம், அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக நிரந்தரமான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டது.
வெளியிலிருந்தவாறு பனிச்சறுக்கு வீரர்களைப் புன்னகையுடன் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது புரோமிதியஸ் சிலை (Prometheus Statue). கிரேக்க புராணங்களில் வரும் டைட்டன் இனக் கடவுளான புரோமிதியஸின் தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச்சிலை நியூயார்க்கின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
புரோமிதியஸ் சூரியனின் தேரிலிருந்து திருடி மனித குலத்துக்கு நெருப்பைக் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.
இவை தவிர, டைம்ஸ் டவர், மேடம் துசாட் மெழுகுமியூசியம், ரேடியோ சிட்டி அலுவலகம், 9/11 மெமோரியல் வேர்ல்டு ட்ரேட் சென்டர், வால் ஸ்ட்ரீட், கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையம், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அலுவலகம், உலக அளவில் முக்கிய சர்வேக்கள் எடுக்கும் தாம்ஸ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் அலுவலகம், எம். டி.வி. நெட் ஒர்க்ஸ், ஆப்பிள் நிறுவன தலைமையகம் என மன்ஹட்டனில் பார்க்க வேண்டிய பட்டியல் நீளமாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
மன் ஹட்டனின் பரபரப்பான நகர வாழ்க்கைக்கு நடுவே நதிக்கரையோரம் அமைதியாகவும் கம்பீரமாகவும் நிற்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம். வளாகத்தின் முன்பகுதியில் 193 உலக நாடுகளின் கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பல மொழிகள், வெவ்வேறு நிறங்கள், பலவித உடைகள், வித்தியாசமான முகங்கள், ஆனால் அனைவரும் ஒரே உலகத்தின் குடிமக்கள் என்ற உணர்வு மேலிட உடல் சிலிர்க்கிறது.
அதன் கட்டிட அமைப்பும் உள் அலங்காரங்களும் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தாங்கி நிற்கின்றன. இரண்டு முறை அந்த உலக அரங்கில் உரையாற்றிய அனுபவம் அந்த இடத்துடன் எனக்கு ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளது. அமைதி நிறைந்திருக்கும் ஐநா வளாகத்தை விட்டு வெளியே வரும்போது மீண்டும் மன்ஹட்டன் நகரத்தின் வேகத்தில் நாம் கரைந்துபோகிறோம்.
கலாச்சாரங்கள் சங்கமிக்கும் நகரம்
நியூயார்க்கில் அமெரிக்கர்களுடன் இந்தியர்கள், சீனர்கள், கொரியர்கள், மெக்சிகர்கள், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள்.
அதனால் நகரின் நடுவே நடந்து செல்லும்போது பல மொழிகள் காதில் விழும், பல்வேறு உணவுகளின் மணம் நாசியைத் துளைக்கும். வெவ்வேறு உடைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் கண்முன்னே தோன்றும். ஒரே நகரத்துக்குள் பல உலகங்களைப் பார்க்க முடிவது நியூயார்க்கின் சிறப்பு.
- ரமாதேவி இரத்தினசாமி, எழுத்தாளர்; devianand71@gmail.com