

நீண்ட யோசனைக்கு பிறகே நேபாளத்தைப் பற்றி எழுதத் தொடங்குகிறேன். ஏனெனில் நேபாளத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. சுற்றுலாக்களில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று இயற்கை, மற்றொன்று செயற்கை.
இயற்கையை படைத்த இறைவன் நேபாளத்துக்கு மட்டும் அழகைக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அள்ளிக் கொடுத்திருக்கிறான் போல! வழிபாட்டுத்தலங்கள், அருவிகள், ஆறுகள் , பசுமை பள்ளத்தாக்குகள் என எண்ணி விட 10 விரல்கள் பத்தாத நாடு நேபாளம்.
பசுபதிநாதர் ஆலயம்
தலைநகர் காத்மாண்டு, பசுபதிநாதர் ஆலயத்துக்கு உலக புகழ் பெற்றது என்பதை பலர் நன்கு அறிவார்கள். ஆயினும் காசிக்கு இணையாக, இங்கும் சடலங்கள் எரியூட்டப் படுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எப்படி, காசியின் மணிக்கர்னிக்கா மற்றும் அரிச்சந்திரா காட், போன்றவற்றில் எரியூட்டப்பட்டால் சொர்க்கத்துக்குச் செல்வார்கள் என்று நம்புகிறார்களோ அதே நம்பிக்கை பசுபதிநாதர் கோயில் வளாகத்திற்குள்ளேயே, பின்புறம் அமைந்துள்ள எரியூட்டும் இடங்களிலும் தொடர்கிறது. காசியில் எப்படி கங்கையோ, அப்படி இங்கோ பாக்மதி ஆறும் எரியூட்டப்படும் இடத்தை ஒட்டியே ஓடிக்கொண்டிருக்கிறது.
காசிக்கும் பசுபதி நாதர் ஆலயத்துக்கும் உள்ள மிகப் பெரிய கவனிக்க வேண்டிய வேறுபாடு காசியில் உயிர் பலி கிடையாது. இங்கே ஆடு, கோழி போன்றவற்றை
நேர்த்தி கடனுக்காகப் பலியிடுகிறார்கள். ஆனால் இது முறையல்ல என்று எதிர்ப்போரும் இருக்கிறார்கள்.
பக்தபூர் தர்பார் ஸ்கொயர்
உலகின் பழமையான நகரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது என பல இடங்கள் சொல்லப்பட்டாலும் இங்கு உள்ள பக்தபூர் தர்பார் ஸ்கொயர், பதன் தர்பார் ஸ்கொயர் போன்ற இடங்கள் உங்களைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அழைத்துச் செல்லும்.
காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ள குமாரி கர் நிறைய சுவாரஸ்யமான தகவல்களைத் தக்க வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் நேபாளத்தை ஆண்ட மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லா சிறப்பாக ஆட்சி புரிவதற்கான கட்டளைகளுக்காக, பவானி தேவியை வேண்டி நின்றார்.
தேவியும் அருள் பாலித்து தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கு காட்சி தந்து ஆலோசனை வழங்குவதாகவும், ஆனால் இந்தச் சந்திப்பு யாருக்கும் தெரிய கூடாது என்றும் சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.
மன்னருக்கும் தேவிக்குமான இந்தச் சந்திப்பு தொடர்ந்து கொண்டிருக்கையில் தினமும் தன் தந்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்வதை அறிந்த மகள், அது என்னவென்று அறிய விரும்பி தந்தை சென்ற அறைக்குள் திடீரென்று கதவைத் திறந்து கொண்டு சென்று விடுகிறாள்.
இதைக் கண்ட தேவி, சத்தியத்தை மன்னர் மீறி விட்டதாகக் கோபித்துக் கொண்டு மறைந்து விடுகிறாள். பின்னர் மன்னரின் பெரும் வேண்டுதலுக்குப் பிறகு தேவி மன்னருக்கு ஆலோசனைகள் சொல்கிறாள். தன் ரூபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதே அந்த ஆலோசனை.
வாழும் குமாரி
தேவியின் ஆலோசனைப்படி இன்றும் இரண்டிலிருந்து ஐந்து வயதுடைய சுமார் 32 க்கும் மேற்பட்ட தகுதிகளுடைய ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப் பட்டு வாழும் தெய்வமாக கருதப்படுகிறார்.
விழா காலங்களில் மட்டுமே வெளிவரும் வாழும் குமாரியை உலகெங்கிலுமிருந்து வந்து பலரும் தரிசிக்கிறார்கள். தெய்வீக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தக் குமாரி பூப்பெய்தும் வரை, தெய்வமாக இங்கே வாழ் கிறார்.
அவர் பூப்பெய்ததும் வேறொரு பெண் குமாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்றளவும் நேபாளத்தில் நடைமுறையில் உள்ள இந்தச் சடங்கும் வாழும் தெய்வமும், பெண்களைத் தெய்வமாக வழிபடுவதின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
சரி, ஒரே பக்தி மயமாக இருக்கிறது என்று குழப்பிக் கொள்ளாதீர்கள், இதோ வருகிறேன். நேபாளத்தில் சும்மா வேற லெவல் என்று நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் விஷயம் எவரெஸ்ட் சிகரத்தை காணும் விமான பயணம்.
எவரெஸ்ட் சிகரம்
சுமார் ஒரு மணி நேர விமான பயணத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அழகை காணும் பொருட்டு அனைவருக்கும் ஜன்னல் ஓரத்தில் சீட் கிடைக்கிறது. உலகின் உயரமான சிகரங்களான எவரெஸ்ட், சோ ஓயு மற்றும் சிலவற்றைக் கண்டு ரசிப்பதோடு மட்டு மில்லாமல் சிறப்பாக புகைப்படம் எடுக்க முடியும்.
வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த மவுண்ட் எவரெஸ்ட் சுற்றுலாவை முடித்துவிட்டு இறங்கும்போது, விமான நிறுவனம் நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப் பார்த்ததை உறுதி செய்து உங்கள் பெயரிலேயே ஒரு சர்டிபிகேட் தருகிறார்கள். வேறு என்ன, போய்விட்டு வந்து தாராளமாக பிரேம் போட்டு வீட்டில் மாட்டிக் கொள்ளலாம்.
மனகமனா
மனகமனா என்பதற்கு மனம் விரும்பும் என்பது பொருளாம். அதாவது இங்குள்ள பகவதி அம்மன் கோயில் வேண்டிய வரம் எல்லாம் தரும் என்பதே இங்குள்ளோரின் நம்பிக்கை. கடல் மட்டத்திலிருந்து மேலே உள்ள மனகமனா கோவிலுக்குச் செல்ல சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
ஆனாலும் நம் பயணத்தின் இருபுறமும் கூடவே ஓடிவரும் இயற்கையின் அழகு, உங்களைக் கவிதை பாட வைக்கும். மனகமனா கோயிலுக்குச் செல்ல கேபிள் கார் இருந்தாலும் நடந்து மலை ஏற விரும்புவருக்கும், ட்ரக்கிங் செய்வோருக்கும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். நடக்கும்போது தெரியும் பள்ளத்தாக்குகளும், ஆரஞ்சு வயல்களும் , திரிஷிலா நதியின் அழகும் கண்களை நிலை குத்தி நிற்க செய்கின்றன.
தேவதை வடிவத்தில் ராணி
மனகமனா கோயிலில் உள்ள புராணக்கதை சற்று சுவாரசியமானது. கூர்கா மன்னர் ஒருவரின் ராணி, தெய்வீக சக்திகளைக் கொண்டிருந்ததாகவும் அது அவருடைய தீவிர பக்தர் லெகன் தாபாவுக்கு மட்டுமே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருமுறை ராணியை தேவதை வடிவத்தில் பார்த்தபின் ராஜா மர்மமான முறையில் இறந்து விட்டாராம்.
ராஜா இறந்தபின் அக்கால வழக்கப்படி, ராணி உடன்கட்டை ஏறி விடுகிறார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயி கல்லைப் பிளக்கும் போது அதிலிருந்து ரத்தமும் பாலும் வழிந்தன. இதைக் கேள்விப்பட்ட ராணியின், தெய்வீக சக்தி அறிந்த லகன் தாபா, இறந்து போன ராணி மீண்டும் வந்து விட்டதாக நம்பி, அந்த இடத்தில் வழிபாடுகளைச் செய்ய தொங்குகிறார். அந்த இடம் தான் இன்று பகவதி தேவியின் ஆலயமாக புகழ்பெற்று இருக்கும் மனகமனா.
சிறந்த சூர்யோதயம்
அடுத்ததாக உலகின் அழகான மிகச்சிறந்த சூர்யோதயம் பார்ப்பதற்கு காத்மாண்டுவிலிருந்து சுமார் முக்கால் மணி நேரம் பயணம் என்பதால் அதிகாலையிலேயே பிக்கப் செய்து விடுவார்கள். ஒரு குட்டித் தூக்கத்தை பயணத்திலேயே முடிக்கும்போது நீங்கள் வர வேண்டிய இடத்துக்கு வந்து விடுவீர்கள்.
காத்மாண்டுவை ஒட்டி நாகர்கோட் , சந்திரகி மலை, சிசாபணி போன்ற பல இடங்கள் இருந்தாலும் சிறந்த சூரிய உதயத்துக்கு என இங்கு பெரும்பாலானோர் விரும்புவது நாகர்கோர்ட். காரணம் இமயமலையில் இருந்து அப்படியே கண்களைக் கொள்ளை கொண்டு வெளிவரும் சூரியன் அதிகாலை ஆரஞ்சு வெளிச்சத்தில் தெரியும் மலை அழகு மற்றும் பள்ளத்தாக்கு என மனமெல்லாம் அழகு குடி பெயர்கிறது.
சரி இப்ப கொஞ்சம் அட்வென்சர் பக்கம் போகலாம். அட்வென்ச்சர் விளையாட்டுகளுக்கும், த்ரில்லை விரும்புபவர்களுக்கும் பஞ்சமே இல்லாத நாடு, நேபாளம். திரிசூலி நதியில் மேற்கொள்ளும் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் விளையாட்டு நம்மை வாயடைத்துப் போக செய்கிறது.
இரண்டு பக்கம் உயர்ந்த மலைகள், ஆங்காங்கே தென்படும் பசுமை பரப்புகள், அலைகளுக்கு நடுவே குதித்து நெளிந்து நீர் பரப்பின் மேல் அந்தரத்தில் பறந்து, பின்னர் ஆறு தொட்டு ஆடும் இந்த விளையாட்டு அடிவயிற்றில் கிலி பரப்புகிறது.
இந்த நீர் விளையாட்டு கிடைக்கும் இடம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் இருக்கிறது. நேபாளத்தில் மலைப்பகுதியில் நாம் பயணம் செய்யும் சாலைகள் கரணம் தப்பினால் மரணம் என்பது போலவே இருக்கும். ஆனால் பயணத்தின் போது கண்களுக்குள்ளே வரும் இயற்கை நம்மை எதைப் பற்றியும் கவலைப்பட வைக்காது.
- malaipa@yahoo.in