

இந்தியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்துவருவது மிக முக்கியமான நகர்வு. இவ்விஷயத்தில், கவனமான அணுகுமுறையை அரசு கையாள்வது அவசியம். இன்றைய நவீன உலகில் குழந்தைகள், இளையோர் மீது சமூக ஊடகங்கள் ஏற்படுத்திவரும் எதிர்மறைத் தாக்கம் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.
இளம் வயதினரிடமிருந்து சமூக ஊடகங்களை விலக்கிவைக்க வேண்டும் எனக் குரல்கள் ஒலித்துவரும் நிலையில், இதில் முன்னோடி நாடாக, 16 வயதுக்கு உள்பட்ட சிறார் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கடந்த டிசம்பர்10இல் ஆஸ்திரேலியா தடைசெய்தது.
இதன்படி, அந்நாட்டுச் சிறார் யாரும் புதிதாகச் சமூக ஊடகக் கணக்கு தொடங்க முடியாது; பயன்பாட்டில் உள்ள கணக்குகள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்டோருக்கு இதே தடை அமலுக்கு வர உள்ளது. டென்மார்க், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இத்தகைய கட்டுப்பாடு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.