

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் ரோஜா மற்றும் கிரை சாந்திமம் மலர்களால் அமைக்கப்பட்டுள்ள கார்ட்டூன் முயல், டால்பின்கள்.
பழநி: கொடைக்கானல் ரோஜா பூங்காவில் 30,000 மலர்களால் கார்ட்டூன் முயல், டால்பின் ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக் கலைத் துறையினர் மூலம் பராமரிக்கப்படும் ரோஜா பூங்காவில், பல்வேறு வகையான ரோஜா செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரோஜா பூங்காவில் 10 ஏக்கரில் 1,500 வகையான 16,000 செடிகள் உள்ளன.
கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் ரோஜா பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ரோஜா செடிகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு என பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தாண்டு பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி கடந்த மே 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த பூங்காவுக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக்கூடிய இடமாக ரோஜா பூங்கா உள்ளது. அதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவை பார்க்க தவறுவதில்லை. எனவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக கார்ட்டூன் முயல், டால்பின்கள், இதயம், செல்ஃபி பாய்ன்ட் போன்றவை 30,000 ரோஜா, கிரைசாந்திமம் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை பார்த்து ரசித்தும், அருகில் நின்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். ஊட்டியைப் போல் அடுத்த ஆண்டு கொடைக்கானல் ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.