சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை!

ஜன.12-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை!
Updated on
2 min read

சுற்றுலா பயணிகளுக்காக, சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கவுள்ளது.

சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில், 20 ஆண்டுகளுக்கு முன்பு டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் அதிக பேர் பயணிக்கலாம். மாநகரங்களின் உயரமான கட்டடங்களின் அழகையும் ரசிக்கலாம். குறிப்பாக, சென்னையில் தாம்பரம் - பிராட்வே இடையே 18 ஏ வழித்தடத்தில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, மாநகரில் மேம் பாலங்கள் அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், இந்த பேருந்துகளின் சேவை 2008-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டு பேருந்துகளை ஒருங்கிணைந்த டிரெய்லர் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறுகிய சாலையில் செல்வது கஷ்டமாக இருந்ததால், இந்த சேவையும் நிறுத்தப்பட்டது.

தற்போது, புதுபொலிவுடன் ஏசி வசதியுடன் கூடிய அதிநவீன மின்சார ஏசி பேருந்துகள் பல்வேறு நகரங்களில் இயக்கப்படுகின்றன. இதுபோல, 18 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவையை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், முதல் கட்டமாக, 20 டபுள் டெக்கர் ஏசி மின்சார பேருந்துகளை வாங்கவும், இயக்கப் பணிகளை மேற்கொள்ளவும் மாநகர போக்குவரத்து கழகம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

இதற்கிடையில், சுற்றுலா பயணிகளுக்காக, சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கப்படவுள்ளது. சென்னையின் அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்க சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, அயலக தமிழர்கள் நிதி பங்களிப்புடன் முதல் கட்டமாக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டெக்கர் பேருந்து அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பேருந்தின் இரு பக்கவாட்டிலும் தஞ்சை பெரியகோயில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, இந்த பேருந்து அடையாறு- மாமல்லபுரம் தடத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. தற்போது, இப்பேருந்தின் சோதனை ஓட்டம் நிறைவடைந் துள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக, டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்கவுள்ளது. இப்பேருந்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அயலக தமிழர்கள், அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து இப்பேருந்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்கிறார். இந்நிகழ்வு நாளை (ஜன.12) நடைபெறுகிறது. இந்த பேருந்து, அடையாறு - மாமல்லபுரம் இடையே பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சென்னை நகர சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடங்க இருப்பதால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை!
கொடைக்கானல்: ஜன.12 முதல் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு நுழைவுக் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே வசூல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in