

படங்கள்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: திருப்போரூரில் ரூ.611 கோடி மதிப்பீட்டில் 64 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ரைடுகளுடன் கூடிய சென்னை வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், புவனேஷ்வர் ஆகிய நகரங்களை தொடர்ந்து வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனத்தின், பிரபலமான ‘வொண்டர்லா’ பொழுதுபோக்கு பூங்கா தற்போது சென்னைக்கு வந்திருக்கிறது. திருப்போரூரில் உள்ள இள்ளலூரில் ரூ.611 கோடியில் 64.30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ரைடுகளுடன் சென்னை வொண்டர்லா நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அரசு தலைமை செயலர் நா.முருகானந்தம் உடனிருந்தார்.
இந்தியாவின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான வொண்டர்லாவின் 5-வது கிளை இதுவாகும். இதில் தஞ்சோரா, ஸ்பின் மில், ஃப்ரீ ஸ்டைலர், வேவ் ஃபூல், ரெயின்போ லூப்ஸ், மோனோ ரயில், மினி எக்ஸ்பிரஸ் என இளைஞர்களுக்காக 9 ஹை-திரில்லிங் ரைடுகள், குடும்பங்கள் கொண்டாட 17 நீர் சார்ந்த விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கென 9 தனி ரைடுகளுடன் மொத்தம் 43 ரைடுகள் இடம்பெற்றுள்ளன. வார நாட்களில் ரூ.1,489 ஆகவும், வார இறுதி நாட்களில் ரூ.1,779 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் தனிக்கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுதவிர பயனாளர்களின் வசதிக்காக புட் கோர்ட், மல்டிகுசைன் உணவகங்கள், ஓய்வு அறை உள்ளிட்டவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை வொண்டர்லாவில் நடந்த திறப்பு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் வொண்டர்லாவை நேரில் திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:
இந்தியாவின் நம்பர்-1 ‘தீம் பார்க்’ நிறுவனமான வொண்டர்லா, தனது புதிய பொழுதுபோக்கு பூங்காவை சென்னைக்கு அருகில் தொடங்கியுள்ளது. வொண்டர்லாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா இதுதான். இதன்மூலம் 1,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2015-ல் கையெழுத்திடப்பட்டது. பின் அந்த ஆட்சியாளர்கள் அதை கிடப்பில் போட்டுவிட்டனர். கடந்த ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் தானே என்பதற்காக இந்த ஒப்பந்தத்தை நாங்கள் ஒதுக்கிவிடவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 2022-ல் இவர்களை அழைத்து பேசி, 2023-ல் அடிக்கல் நாட்டி, தற்போது வொண்டர்லா திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரைடுகளும் மிக பிரம்மாண்டமாக இருக்கின்றன. பாதுகாப்பும் உலக தரத்தில் அமைத்துள்ளனர். அந்தவகையில் எந்த காலகட்டத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, அதை கையில் எடுத்து அதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசாக திமுக இருக்கிறது. முதல்வரின் அரசியல் மாண்புக்கு உதாரணம் இது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலும் பொழுது போக்குவதற்காக பெங்களூருவில் உள்ள வொண்டர்லாவுக்கு சென்று வருவார்கள். மாமல்லபுரம் மட்டுமே நமக்கு போதுமானதாக இல்லை. அந்தவகையில் இது சென்னைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமாக இருக்கும் என கருதுகிறோம்.” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, வொண்டர்லா நிறுவனத்தின் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் கே.சிட்டிலப்பில்லி, தலைமை செயல் அதிகாரி தீரன் சவுத்ரி, சென்னை பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.