

படங்கள்: ம.பிரபு
காணும் பொங்கலைக் கொண்டாட சுற்றுலாத் தலங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் நேற்று குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையின் 4-ம் நாளில் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் பொது இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக மக்கள் பொழுது போக்குவது வழக்கம். அதன்படி சென்னையின் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் நேற்று காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.
குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும், காசிமேடு மீன்பிடி துறைமுகம். திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடற்கரை, சென்னை புறநகரில் மாமல்லபுரம். கோவளம் கடற்கரைகளிலும் காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொது மக்கள் காலையிலேயே தங்களது குடும் பத்தோடு திரண்டு வந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவிலும், கிண்டி சிறுவர் பூங்காவிலும் அதிகளவில் மக்கள் குவிந்ததால் நுழைவுச் சீட்டு வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 'சென்னை உலா' என்ற வின்டேஜ் தோற்றத்திலான பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதும், அந்தப் பேருந்துடன் புகைப்படம் எடுப்பதுமாக இளைஞர்கள் காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர். மேலும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பொருட்காட்சியிலும் கூட்டம் அலைமோதியது. அங்கே இருந்த ராட்டினங்களில் ஏற நீண்ட வரிசையில் சிறுவர், சிறுமியர் காத்திருந்தனர்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி: இதேபோல் கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக் கல்லூரி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட் டம், மெரினா கடற்கரை, தியாகராய நகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கிண்டி கத்திப்பாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம், தாம்பரம் வள்ளுவர் குரு குலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்ற சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் கலைகளை அரங்கேற்றி மகிழ்வித்தனர்.
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கோயில்கள், சுற்றுலா தளங்களில் அதிகளவில் மக்கள் திரண்டனர். பொழுது போக்கு மையங்களில் மக்கள் கூட்டம் திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் காவல் துறை சார்பில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடலில் யாரும் இறங்கி குளிக்காத வண்ணம் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்கு கைகளில் முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் கூடிய பேண்டுகள் அணிவிக்கப்பட்டன. பொதுமக்களின் அவசர உதவிக்காக போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.