

ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரையிலும் உள்ள மணல் திட்டுகளில் ( ராமர் பாலம்) இலங்கைக்கு சொந்தமான மணல் திட்டுகளில் இலங்கையின் சுற்றுலாத்துறை சார்பாக படகு சேவை நாளை (திங்கட்கிழமை) தொடங்கிறது.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடற்பகுதியில் 13 மணல் திட்டுகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 திட்டுகள் இந்தியாவிற்கும், 7-ல் இருந்து 13 வரையிலான திட்டுகள் இலங்கைக்கும் சொந்தமானவை ஆகும்
இலங்கை அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டின் எல்லை பகுதிக்குள் உள்ள 8 முதல் 13ம் மணல் திட்டுகள் வரையிலும் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுசேவை இயக்குவதற்கான சாத்தியகூறுகள் ஆராயப்பட்டன. இதனை தொடர்ந்து திங்கட்கிழமையிலிருந்து இந்த படகு சேவை தொடங்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு மணல் திட்டுக்களுக்கான (ராமர் பாலம்) முன்னோட்ட படகு சேவை தலைமன்னாரில் நடைபெற்றது. இதில் இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், மன்னார் மாவட்ட ஆட்சியர்.கனகேஸ்வரன், வடக்கு மாகாண சுற்றுலாத்து துறை தலை விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறியதாவது: தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
மேலும், மன்னார் மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுலா வளங்களை அறிமுகப்படுத்தப்படுவதுடன், இதன் முலம் மன்னார் மாவட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையையும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.