நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி

நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி
Updated on
1 min read

கம்பம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையின் அளவு குறைந்ததால் சுருளித் தீர்த்தம் அருவியில் நீர்வரத்து சீராகியது. இதனைத் தொடர்ந்து அருவியில் குளிக்க இன்று(திங்கள்) காலை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கி.மீ.தூரத்தில் சுருளித்தீர்த்தம் அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள ஹைவேவிஸ் தூவானம் அணை நீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி மழையும் இங்கு அருவியாக கொட்டுகிறது. பல்வேறு மூலிகைகளை கடந்து இந்த நீர் வருவதால் இது தீர்த்தம் அருவி என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கைலாசநாதர் குகை, பூதநாரயணன் கோயில், ஆதி ஆண்ணாமலையார் கோயில், வேலப்பர், ஐயப்பன், பஞ்சமுக ஆஞ்சநேயர், கன்னிமார் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளன. இதனால் இந்த அருவி சுற்றுலா தலமாக மட்டுமல்லாது புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வதுடன், தர்ப்பணம் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையினால் கடந்த ஒன்றாம் தேதி நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் இங்கு வர வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று (ஞாயிறு) மழையின் அளவு குறைந்ததால் நீர்வரத்து சீராக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல்(ஆக.3) பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், “நீர்வரத்துக்கு ஏற்ப சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். இதன்படி தண்ணீரின் அளவு குறைந்ததால் இன்று(திங்கள்) காலை முதல் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அருவிக்குச் செல்ல ரூ.30ம் குழந்தைகளுக்கு ரூ.20ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ரூ.20ம் பெறப்படுகிறது. தினமும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் குளிக்கலாம். மது அருந்தி வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை” என்று வனத்துறையினர் கூறினர்.

நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி
குடிநீர் பிரச்சினை - காலி குடங்களுடன் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in