

இந்தியர்கள் அதிகமாக சென்ற,செல்லும் நாடுகளின் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது இந்தோனேசியாவின் பாலி தீவு. சென்னையில் இருந்து நேரடி விமானம் இல்லை. இரண்டு விமானங்கள் மாறிச் செல்வதால் நேரமும் அதிகம். ஆனால் இவற்றைத் தாண்டி பாலி-யில் கூட்டம் குவிக்கிறதென்றால் ஏதோ ஒரு கவர்ச்சி அங்கே இருப்பதாகத்தானே அர்த்தம்! அது உண்மை தான்.
இந்தோனேசியா இஸ்லாமிய நாடாக அறியப்பட்டாலும் பாலி-யின் கலாச்சாரம் இந்து பாலி என்று அழைக்கப்படுகிறது. இந்து மற்றும் புத்த மத கலாச்சாரத்தின் கலவையே பாலி என சொல்லலாம்.
இந்து மதத்தின் தீவு, கடவுள்களின் தீவு என்றெல்லாம் அழைக்கப்படும் பாலியின் தலைநகர் தென்பசாரில் (Denpasar) விமானம் இறங்கியதுமே நமக்குள் உற்சாகம் பற்றிக் கொள்கிறது.
வெளிநாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டாலும் சொந்த மண்ணில் இருப்பது போன்ற ஒரு வைப்ரேஷன் நமக்கு வருகிறது. இந்தோனேசியாவின் முக்கிய சுற்றுலா தலமான பாலி-யில் சுற்றுலா தொடர்பான வணிகம் மட்டுமே சுமார் 80 சதவீதத்துக்கும் மேல். மதம் தொடர்பான சடங்குகள், கோயில்கள் வருடம் முழுவதும் தொடரும் திருவிழாக்கள் என எப்போதுமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது பாலி.
அம்மக்களின் நாட்காட்டிக்கு பெயர் கலுங்கான், குனிங்கான். இந்த நாட்காட்டியின் படி நமக்கு எப்படி வருடத்துக்கு 365 நாட்களோ அதே போல் இவர்கள் 210 நாட்களைக் கணக்கில் கொள்கிறார்கள். அதாவது பாலியில் கொண்டாடப்படும் தீபாவளி 210 நாட்களுக்கு ஒருமுறை வரும். பாலியில் பிறக்கும் இந்து மத குழந்தைகள் 210 நாட்களுக்கு ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுவர்.
சரி, பாலியில் கொண்டாடப்படும் தீபாவளி பக்கம் வருவோம். பூமிக்கு ஒவ்வொரு வருடமும் வந்து விட்டுச் செல்லும் தெய்வங்கள், 10 நாட்கள் தங்கி விட்டுச் செல்வதாக பாலி மக்கள் நம்புகின்றனர். இந்தப் பத்து நாட்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும் பாலியை காண கண்கள் இரண்டு போதாது, இந்த 10 நாட்கள் கொண்டாட்டத்தில் இவர்கள் தீபாவளியையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
இவர்களின் தீபாவளி கொண்டாட்டம் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்துதல் என்றே பொருள் கொண்டிருக்கும். இவர்கள் மலர்கள், உணவு என்று விதவிதமாகத் தெய்வத்துக்குச் செய்கிறார்கள். அதாவது நம் ஊரில் படையல் போடுவோமே அதேதான்.
ஆனாலும் பாலிக்குச் சுற்றுலா செல்லும் நம்மவர்கள், “தீபாவளி அதுவும், வீட்டிலே என்ன சட்டி வைக்காம , டூரா?” என்ற கேள்வியோடு நம் ஊரிலேயே தீபாவளியை கொண்டாடிவிட்டு பாலியின் தீபாவளியை மிஸ் பண்ணி விடுகிறார்கள்.
கடவுள்களின் தேசம் , கோயில்களின் உலகம் என்றெல்லாம் பாலி அறியப்பட்டாலும் அதை தாண்டி பச்சை பெயின்ட் அடித்துக் கொண்ட வயல்வெளிகள், இயற்கை குறையாத கடற்பரப்புகள் , குமுறும் எரிமலைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ராமாயணத்தை பாலியில் கொண்டாடும் அளவுக்கு வேறு எங்கும் கொண்டாடுவார்களா என்று எனக்கு தெரியவில்லை.
எங்கு சென்றாலும் ராமாயணத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு அவ்வளவு தத்ரூபமாகவும், அற்புதமாகவும் நடித்துக் காட்டுகிறார்கள். பாலியின் முதன்மையான அட்ராக்க்ஷன் லிஸ்டில் வருவது, தானா லோட் (tanah lot) கோயில்.
இந்தப் புகழ்பெற்ற இந்து கோவிலுக்கு வழிபாட்டுக்கென வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் குறைவு. ஆனால், கடலுக்கு நடுவே பெரிய பாறையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மொபைல் போன் வைத்திருப்போர் எல்லோரும் கேமராமேனாக மாறி விடுவதை காண முடியும். ஆம்! இந்த கோயிலின் சூரிய அஸ்தமனம் நமக்குள் இருக்கும் அத்தனை ரசனையையும் ஒட்டுமொத்தமாக வெளிக்கொண்டு வருகிறது.
ராமாயண கதை: தானா லோட் போலவே மிகவும் சிறப்பானது உலுவாத்து (uluwatu). இதுவும் கடற்கரை கோயில் என்றாலும் இங்கே எக்ஸ்ட்ராவாகப் புகழ்
பெற்றிருக்கும் அலைசறுக்கு, கெசக் நடனம் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் நிறையவே ஈர்க்கப்படுகிறார்கள்.
அலைகளின் அழகை பார்த்தபடி, பாறைகளின் மேலே அமைந்துள்ள இந்த இடமும், ஒரு இந்து கோயில். இங்கே சூரியன் மறையும் போது கோயிலின் பின்னணியில் நடத்தப்படும் ராமாயண கதை, நடனம் உங்களை வேறொரு உலகுக்கே அழைத்துச் செல்லும்.
இதையும் தாண்டி இங்கே நிகழும் அற்புதமான அலைச்சறுக்கிற்கென உலகெங்கும் இருந்து வரும் வீரர்களைக் காண முடிகிறது. பாலி-யின் மற்றொரு ஈர்ப்பு கிந்தாமணி (kintamani). இங்கிருந்து காணக்கிடைக்கும் மவுண்ட் பாத்துர் எரிமலை, மற்றும் அங்குள்ள ஏரி இவை இரண்டும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகு .
கிந்தாமணிக்கு செல்வோர் ஒரு சில இரவுகளாவது தங்குவது நல்லது. ஏனெனில் இயற்கை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இறைத் திருக்கும் கிந்தாமணியில் எரிமலை மற்றும் அருகில் உள்ள நீர்வீழ்ச்சிகள் கொஞ்சமும்மாறாத கிராமப்புற அழகு என இந்து, பாலி-யின் கலாச்சாரம் அனுபவிக்க நிறையவே கிடைக்கிறது.
யோக்கிய கர்த்தா: இந்தோனேசியா என்றாலே வெறும் பாலி மட்டும் தானா? என்ற உங்கள் குரல் கேட்கிறது. பாலி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே அதன் பொருள். பாலியோடு நீங்கள் யோக்கிய கர்த்தா (Yogyakarta) அல்லது ஜோக் ஜகர்த்தா என்று அழைக்கப்படும் இந்த இடத்தையும் தேர்வு செய்யலாம்.
ஆனால் யோக்கிய கர்த்தா பெரும்பாலும் வரலாற்றுச் சுவடுகளை விரும்புவோருக்கானது என சொல்லலாம்.போராபுடூர் மற்றும் ப்ராம்பனன் கோயில்கள் (Prambanan Temple) யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில்கள் முழுமையான இந்து கோயில் வளாகமாகும்.
மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கான கோயிலான இது, இந்தோனேசியா கட்டிடக் கலையை காண ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். பழமை ஒருபுறம் மற்றும் இதன் பிரம்மாண்டம் ஒருபுறம் என்று மலைத்துப் போகச் செய்கிறது இந்த இடம். இந்து கலாச்சாரத்தின் அடையாளமான இந்த வளாகத்தை இந்தோனேசியா அரசு தொன்மை மாறாமல் அப்படியே பராமரித்து வருவது இதன் சிறப்பு.
யோக்யகர்த்தாவின் பிஸியான தெருக்கள், உங்களை மனம் கவரும் விதவிதமான உணவு வகைகள், குட்டி குட்டி தெருக்களின் ஷாப்பிங் என உங்கள் பட்ஜெட்டை பதம் பார்க்காதவை இங்கு நிறையவே உண்டு. இந்தோனேசியாவுக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம் இல்லை.
இரண்டு இடங்கள் மாறி போக வேண்டும். அப்படி என்றால் செலவு நிறைய ஆகுமே என்று நினைக்காதீர்கள். இந்தோனேசியாவுக்கான பேக்கேஜ் டூர்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு நிறையவே கிடைக்கின்றன. வாருங்கள் நமது ராமாயணத்தை இந்தோனேசியாவில் சென்று பார்ப்போம்.
- malaipa@yahoo.in