

சென்னை: முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கும் விடுதி உணவகங்களில் ரூ.99-க்கு பிரியாணி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டார்.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம், சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஓட்டல் தமிழ்நாடு, அமுதகம் உணவகம், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் 15 படகு குழாம்கள், ஆலயம் தங்கும் விடுதிகள், 15 சொகுசு பேருந்துகளுடன் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 64 சுற்று பயண தொகுப்புகள், 8 குயிக் பைட்ஸ் விற்பனை நிலையங்களில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
அனைத்து தங்கும் விடுதிகளிலும் ‘டைனமிக் ப்ரைசிங்’ கட்டண முறையை தொடர்ந்து செயல்படுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டல் தமிழ்நாடு உண
வகங்களில் மே மாதம் முதல் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவை சிறப்பாக நடத்தவும், முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கும் விடுதி உணவகங்களில் பிரியாணி ரூ.99-க்கும், அசைவ விருந்து ரூ.499-க்கும் விடுமுறை நாட்களில் வழங்க வழிவகை செய்யுமாறு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், சுற்றுலாத் துறை செயலர் சி.ஸ்வர்ணா, இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், இணை இயக்குநர் அ.சிவப்ரியா, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.