

திண்டுக்கல்: கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி இன்று (மே 31) நடந்த நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற பல வகையான நாய்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மே 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மே 26 முதல் மே 30 வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது. கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவர தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கால்நடைத்துறை சார்பில் நடந்த நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர் மேன், பக், லேப்ராடர், சிப்பி பாறை போன்ற 20-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்ப திறன், பராமரிப்பு முறை மற்றும் உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனுக்குடன் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மன்னவனூர் மத்திய செம்மறி ஆடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி திருமுருகன் பரிசு வழங்கினார். கால்நடைத் துறை உதவி இயக்குநர் பிரபு, சுற்றுாலத் துறை அலுவலர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாய்களின் குறும்புத்தனமான சேட்டைகள் மற்றும் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.